இலவசக் கல்வியை வலுப்படுத்துவதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும்

33 0
அரசாங்கத்தின் நிதியில் மாத்திரம் நாட்டை அபிவிருத்தி செய்ய விரும்புபவர்கள் புதிய எண்ணக்கருக்களை புரிந்து கொள்வதில்லை.

இவர்களால் புதிய வழியில் செயல்பட முடியாது. வேலை செய்ய முடியாதவர்களும், வேலை செய்ய தெரியாதவர்களும் இந்த வேலைத்திட்டங்களை விமர்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

முதுகெலும்பும் திறமையும் இருந்தால், வீராப்பு பேசாமல் தம்முடன் இணைந்து போட்டிக்கு வந்து பணியாற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்தார்.

வேலை செய்பவர்களை ஒரு போதும் குறை கூறமாட்டேன். அவர்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

இன்று கல்வி முறையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளது. பணக்காரர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வி அளிக்கப்படும் நிலையில், அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு சரியான மனித வளமும், பௌதீக வளமும் வழங்கப்படுவதில்லை. இலவசக் கல்வியை வலுப்படுத்துவதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும். இதற்கான வேலைத்திட்டம் தன்னிடம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதுபோன்ற வேலைத்திட்டங்கள் குறித்து தெரியாதவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகளை பரப்புகின்றனர். இவர்களுக்கு வரலாறு தெரியாத காரணத்தினாலேயே இவ்வாறான நகைச்சுவைகளை வெளியிடுவதால் முதலில் வரலாற்றை படிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 251 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், குருநாகல், தொடம்கஸ்லந்த, பானகமுவ அந்நூர் மத்திய கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 22 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.