நாளை கூடுகிறது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி : பொதுவேட்பாளர் குறித்து கூட்டு முடிவு?

75 0

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நாளை திங்கட்கிழமை (24) பிற்பகல் ஒரு மணியளவில் வவுனியா கோவிற்புளியங்குளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறவுள்ளது.

 

 

 

 

இந்தக் கூட்டத்தில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலாதன் புளொட் தலைவர் சித்தார்த்தன், பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிறீகாந்தா மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோரும் நிறைவேற்றுக் குழுவின் ஏனைய அங்கத்தவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தின்போது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் ஜனநாயக தேசியக் கூட்டணியாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே பொதுவேட்பாளர் தொடர்பில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கத்துவங்களைக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக உரையாடல்களை செய்திருந்த நிலையில் அக்கட்சிகள் தமது கட்சிகளின் உயர்மட்டக் குழுவினருடன் ஆராய்ந்துவிட்டு பதிலளிப்பதாக குறிப்பிட்டிருந்தன.

அதனடிப்படையில், ரெலோ, புளொட், .பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகள் தனித்தனியாக கூடி தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாக தீர்மானம் எடுத்து அறிவித்திருந்தன. இந்நிலையில் தான் நாளைய சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பொதுவேட்பாளர் குறித்த கூட்டுமுடிவு எடுக்கப்படவுள்ளதோடு சிவில் அமைப்புக்களின் கட்டமைப்பான ‘தமிழ் மக்கள் பொதுச்சபை’யுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பிலும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளன.

தமிழ் மக்கள் பொதுச்சபையானது அடுத்தகட்டமாக ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்காக பொதுக்கட்டமைப்பை ஸ்தாபிக்கவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பொதுக்கட்டமைப்பினுள் உள்வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.