பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை நீக்கம்; நிராகரித்தது மேல்முறையீட்டு ஆணையகம்

58 0

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்விடுத்த வேண்டுகோளை தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையம் நிராகரித்துள்ளது.

இதன்படி விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்

இங்கிலாந்து தடை செய்யப்பட்ட அமைப்பு மேல்முறையீட்டு ஆணையம் பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு சுயாதீன நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற மூத்த தூதர்கள் தலைமையில் தடை நீக்கத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்குகிழக்கில் தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தது என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய இராச்சியத்தில் தடை செய்யப்படவில்லை,என டுவிட்டரில் தெரிவித்துள்ள அலிசப்ரி அந்த அமைப்பு சாத்வீக வழிமுறைகள் ஊடாக தனது நோக்கங்களை அடைய முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

உலகநாடுகள் தங்கள் மீதான தடையை நீக்கச்சசெய்வதன் மூலம் தாங்கள் மீண்டும் உயிர்பெறும் நிலையை உருவாக்குவதே விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பின் மூலோபாயம் அணுகுமுறை என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.