பால்நிலைசமத்துவ சட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக தெரிவித்த கருத்துக்களும் நீதியமைச்சர் தெரிவித்த கருத்துக்களும் நீதித்துறையை அச்சுறுத்தும் தன்மை கொண்டவை என சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி நீதியமைச்சர் கல்வியமைச்சர் ஆகியோர் நிறைவேற்று அதிகாரத்தின் முழுமையான பிரதிநிதிகள் என சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்கும் முக்கியஅரசமைப்பு அதிகாரம் மற்றும் பொறுப்பை ஜனாதிபதி செயற்படுத்துகின்றார் என சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.நீதியமைச்சர் நீதித்துறையின் வளங்களை கட்டுப்படுத்துகின்றார் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி உயர்நிறைவேற்று அலுவலகம் நீதித்துறை குறித்து நயவஞ்சகமான கடுமையான கருத்துக்களை வெளியிடுவது தெளிவான அதிகார துஸ்பிரயோகமாகும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆக்கபூர்வமான விமர்சனம் நியாயமான கருத்து மற்றும் கருத்துவேறுபாடுகள் அனைத்தும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையின் சரியான வடிவங்கள் என தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் அமைப்பு கருத்துவேறுபாடு அச்சுறுத்தலாகவோ மிரட்டலாகவோ மாற முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
தேர்தலிற்கு முன்னர் இவ்வாறான கருத்துக்கள் வெளியாவது அரசியல் ரீதியில் பயனற்றவை என கருதுவதாக தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் அமைப்பு நீதித்துறை மற்றும் ஜனநாயக செயல்முறைகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்கச்செய்பவையாக இவை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் அவரது கருத்துக்கள் கவலையளிக்கின்றன எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.