முதல் தாக்குதல் காரணமாக அச்சமடைந்து கதறியவர்களை காப்பாற்ற சென்ற பலர் இரண்டாவது தாக்குதலில் பலி

32 0
image
காசாவில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையலுவலகத்திற்கு அருகில் உள்ள கூடார முகாம்மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 25க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இரண்டு தடவைகள் தாக்குதல் இடம்பெற்றதாக தாக்குதலில் தனது கணவரை இழந்த பெண்ணொருவர் ஏபிக்கு தெரிவித்துள்ளார்.

முதல் தாக்குதலை தொடர்ந்து பாரிய சத்தம் கேட்டது வெளிச்சம் வெளிவந்தது இதனை தொடர்ந்து என்ன நடக்கின்றது என பார்ப்பதற்காக ஏனையவர்கள் சென்றவேளை இரண்டாவது தாக்குதல் இடம்பெற்றது என மொனா அசூர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் முகாம்களிற்குள் இருந்தோம் அவ்வேளை அவர்கள் செஞ்சிலுவை சங்கத்திற்கு அருகில் உள்ள கூடாரங்கள் மீது சத்த குண்டுதாக்குதலை மேற்கொண்டனர் அவ்வேளையே எனது கணவர் வெளியே சென்றார் என கான்யூனிஸ் மருத்துவமனைக்கு அருகில் வைத்து அந்த பெண் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அவர்கள் இரண்டாவது தாக்குதலை மேற்கொண்டனர் செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலக வாயிலிற்கு அருகில் இந்த தாக்குதல் இடம்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

முதல் தாக்குதல் காரணமாக பதற்றமடைந்த மக்களிற்கு உதவிக்கொண்டிருந்த தனது இரண்டு மகன்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என ஹசான் அல் நஜாய் தெரிவித்துள்ளார்.

பெண்களும் குழந்தைகளும் அலறியதை தொடர்ந்து எனது புதல்வர்கள் அவர்களை காப்பாற்ற விரைந்தனர் என அவர் மருத்துவமனையிலிருந்தவாறு தெரிவித்துள்ளார்.

அவர்கள் பெண் ஒருவரை காப்பாற்ற சென்றனர் அவ்வேளை இரண்டாவது ஏவுகணை தாக்கியது அவர்கள் தியாகினார்கள் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.