கொழும்பிற்கு வருகை தந்த இந்திய கடற்படைக் கப்பல் சாசெட்

30 0

இந்திய கடலோர காவல்படையின் ரோந்து கப்பலான சாசெட் இரண்டு நாள் பயணமாக கடந்த 19 ஆம் திகதியன்று கொழும்பை வந்தடைந்த நிலையில் இலங்கையில் இருந்து கடந்த 21 ஆம் திகதி மீண்டும் இந்தியா புறப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலில் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய உதிரி பாகங்கள் இலங்கை கடலோரக் காவல்படையின் கப்பலான சுரக்ஷாவிற்கு இலவசமாகக் கொண்டு வந்துள்ளது.

இந்திய கடலோரக் காவல்படையின் கட்டளை அதிகாரி, பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.ராஜேஷ் நம்பிராஜ், இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் டி.எஸ்.கே.பெரேரா மற்றும் இலங்கை கரையோர கடற்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பூஜித விதான ஆகியோரை சந்தித்தார்.

இதன்போது இந்திய கடலோர காவல்படை கப்பலில் கொண்டுவரப்பட்ட உதிரிப் பாகங்கள்  ஒப்படைக்கப்பட்டன. இதில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் டிஎஸ்கே பெரேரா, இலங்கை கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பூஜித விதான மற்றும் மூத்த இலங்கை கடலோர காவல்படை மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

எஸ்.எல்.சி.ஜி.எஸ் சுரக்ஷா கப்பலானது கடந்த 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு கடல் ரோந்துக் கப்பலாகும். முன்னதாக ஜூன் 2021 மற்றும் ஏப்ரல் 2022 இல் இந்தியா சுரக்ஷா கப்பலுக்கான உதிரி பாகங்களை நன்கொடையாக வழங்கியது.  ஜனவரி 2024 இல் ஹாலோன் சிலிண்டர்களை மீண்டும் நிரப்புவதற்கான உதவியையும் வழங்கியது. இந்த செயற்பாடானது, பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பதற்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இது அடையாளப்படுத்துகிறது.

இவ்வாண்டின் ஆரம்பத்தில் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்திய கடலோர காவல்படையின் சமர்த் மற்றும் அபினவ் ஆகிய கப்பல்கள் காலி மற்றும் கொழும்புக்கு விஜயம் செய்திருந்தன. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் செய்வது இரு நாடுகளுக்கிடையே நட்புறவு மற்றும் இயங்குநிலையை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இந்தியாவின் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி கோட்பாடு மற்றும் அயலவருக்கு முதலிடம் என்ற கொள்கைக்கு இணங்க இந்திய கடற்படைகள் மற்றும் கடலோரக் காவல்படை கப்பல்களின் விஜயங்கள் அமைந்துள்ளன.