பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நீடிப்பு

114 0
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்த 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்க மார்ச் 31ஆம்  திகதி  வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும், பிரதேச செயலாளர்களின் கோரிக்கைகளைக் கருத்திற் கொண்டு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க  வழங்கப்பட்ட கால அவகாசம்  நீடிக்கப்பட்டுள்ளதாக  ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி மேலும் தெரிவித்துள்ளார்.