கள்ளக்குறிச்சியில் 20 ஆண்டுகளாக அனைத்து கட்சியினராலும் காப்பாற்றப்பட்டு வந்த கள்ளச் சாராய வியாபாரி ‘கண்ணுக்குட்டி’

162 0

 கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்டுள்ள கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், கடந்த 20 ஆண்டுகளாக கள்ளச்சாராய வியபாரத்தில் கொடிகட்டிப் பறந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி நீதிமன்ற சுற்றுச் சுவருக்கு அருகிலேயே இவர் கள்ளச் சாராயம் விற்பனை செய்துள்ளார். இவரிடம் கள்ளச்சாராயம் வாங்குவோர் கள்ளக்குறிச்சி நகர காவல் நிலையம் வழியாகத்தான் வெளியே செல்ல வேண்டும்.கண்ணுக்குட்டியின் மாமா அங்குள்ள விஏஓ அலுவலகத்தில் உதவியாளராக இருந்துள்ளார். அவரது ஆதரவில், தொடக்கத்தில் கல்வராயன்மலையில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி வந்து விற்பனை செய்த கண்ணுக்குட்டி, பின்னர் படிப்படியாக தொழிலை விரிவுபடுத்தி, காவல் துறையினர் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்களை தனது தொழிலுக்கு பக்கபலமாக வைத்துக் கொண்டு செயல்பட்டுள்ளார்.

எனினும், சில நேர்மையான காவல் துறை அதிகாரிகளால் 23 முறை கைது செய்யப்பட்டுள்ள கண்ணுக்குட்டி, இருமுறை குண்டர்தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் கள்ளச்சாராயம் விற்பதைக் கைவிடவில்லை.

“நான் மட்டும் கலெக்டராகவோ அல்லது நீதிபதியாகவோ இருந்தால், கண்ணுக்குட்டி போன்றவர்களை தூக்கிலிடுவேன்” என்கிறார் கள்ளச் சாராயத்தால் தாய்,தந்தையை இழந்த சிறுமி லட்சுமி.

அதேபோல, ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 4 பேரை இழந்த முருகன்என்பவர், “பலகாலமாக இங்கு கள்ளச் சாராயம் விற்கப்படுகிறது. மூட்டை தூக்கி பிழைப்பு நடத்தும்எங்கள் குடும்பத்தினர் ரூ.60-க்குவாங்கி வந்து சாராயம் குடிப்பதுண்டு. எனது குடும்பத்தினரை பலமுறை கண்டித்தும் கேட்காததால், கண்ணுக்குட்டியை சந்தித்து இந்த தொழிலைக் கைவிடுமாறு கூறினேன். அதற்கு `போலீஸே ஒன்றும் கேட்பதில்லை. நீ என்ன எனக்கு புத்திமதி சொல்கிறாய்?’ என்று அதட்டினார்” என்றார்.

கடந்த 20 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்று வந்த கண்ணுக்குட்டிக்கு, 1,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதன் மூலம் அதிக வருவாய் ஈட்டி வந்த அவர், காவல் துறை மற்றும் அரசியல்வாதிகளுக்கும் கப்பம் கட்டிவந்ததால், அவருக்கு நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம், அவர்கள் துணையாக இருந்துள்ளனர். அதேபோல, எவ்வித பேதமின்றி அனைத்துக் கட்சியினரையும் அரவணைத்து, கள்ளச் சாராயவிற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் கண்ணுக்குட்டி.

இவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றால், எம்எல்ஏ-விடம் இருந்து, கண்ணுக்குட்டியை விடுவிக்குமாறு தொலைபேசி அழைப்பு வருமாம். இதேபோல, கல்வராயன்மலையில் கள்ளச் சாராயம் காய்ச்சும் பலருக்கும் ஆளும்கட்சி எம்எல்ஏ ஆதரவுஉள்ளதாகக் கூறப்படுகிறது. “ஆளுங்கட்சி எம்எல்ஏ-க்களேஆதரவளிப்பதால், நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்கின்றனர் காவல் துறையினர்.