சென்னை பெருநகர பகுதிக்கு புதிய வாகன நிறுத்த கொள்கை: அமைச்சர் அறிவிப்பு

37 0

சென்னை பெருநகர பகுதிக்கு புதிய வாகன நிறுத்தக் கொள்கை உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சு.முத்துசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கை முடிவில், துறை தொடர்பாக அமைச்சர் சு.முத்துசாமி வெளியிட்ட அறிவிப்புகள்: நகர ஊரமைப்பு இயக்ககத்தை மதிப்பீடு செய்து வலுப்படுத்தவும், நகர்ப்புற வளர்ச்சிக் குழுமங்கள் சிறப்பாகச் செயல்பட முழுமையான நிர்வாக அமைப்பை ஏற்படுத்தவும், பொதுமக்களுக்கு எளிய முறையில் சேவைகளை வழங்கவும் தொலைநோக்கு திட்டத்தை உருவாக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகளை புவியியல் தகவல் முறையில் புவிசார் கூறுகளைக் கொண்டு மக்கள் பயன்பாட்டுக்கான இணைய செயலி உருவாக்கப்படும். தமிழகத்தில் ஏதேனும் ஒரு நகரில் உள்ளூர் திட்டப் பகுதிக்கான நிலச் சேர்ம பகுதி வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.

முழுமைத் திட்ட நில உபயோக வகைப்பாடுகளை பெதுமக்கள் அறிந்துகொள்ள ‘நிலப்பயன்தகவல் அமைப்பு’ உருவாக்கப்படும். 300 சதுர மீட்டருக்குள் கட்டிட பரப்பளவு கொண்ட 14 மீ உயரத்துக்குள் உள்ள அனைத்து வணிக கட்டிடங்களுக்கும் கட்டிட முடிவு சான்று பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் ஈரோடு மாவட்டம் சம்பத் நகரில் 198 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும். திருவண்ணாமலை, மதுரை மாவட்டத்தில் உள்ள 2 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு சொந்தமான நிலங்களில் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் (பெட்ரோல் பங்க்) ரூ.1.30 கோடியில் அமைக்கப்படும்.

சென்னை பெருநகர பகுதிக்கு புதிய வாகன நிறுத்தக் கொள்கை உருவாக்கப்படும். மாநிலத்தின் போக்குவரத்து திட்டமிடல் திறனை மேம்படுத்தும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய பாடப்பிரிவாக போக்குவரத்து திட்டமிடல் பட்ட மேற்படிப்பு (எம்.பிளான்) அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.