ரஷ்யாவில் உயர் கல்வி பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவர் கட்டுநாயக்கவில் கைது

37 0

ரஷ்யாவில் உயர் கல்வி பெற்றுத் தருவதாகக் கூறி சுற்றுலா வீசா மூலம் மாணவர்களை ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்று ஏமாற்றி பண மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (20) நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை, ஹுனுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கந்தானை பிரதேசத்தில் மாணவரொருவரிடம் ரஷ்யாவில் உயர் கல்வி பெற்றுத் தருவதாகக் கூறி 21 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா மோசடி செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபருக்கு எதிராக மாத்தறை பொலிஸ் தலைமையகத்தில் 17 முறைப்பாடுகளும்,  குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் 2 முறைப்பாடுகளும், குருணாகல் பொலிஸ் நிலையத்தில் 3 முறைப்பாடுகளும்,  நாராஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேக நபருக்கு எதிராக வாதுவை , அம்பாறை மற்றும் மொரட்டுவை ஆகிய பொலிஸ் நிலையங்களிலும் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேக நபர் உயர் கல்வி பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றி ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்ற மாணவரொருவரை கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபருக்கு எதிராக ரஷ்யா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னர், சந்தேக நபர் ரஷ்யாவிலிருந்து தப்பித்து விமானம் மூலம் நேற்று (20) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததையடுத்து நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.