தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கான வங்கிக் கடனை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

47 0

தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கான வங்கிக் கடன் வழங்குவதற்கு தேவையான ஆலாேசனைகளை அரச வங்கிகளுக்கு வழங்கி இருக்கிறோம். என்றாலும் அதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நிவர்த்தி செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் இலங்கை வங்கியின் தலைவர் மற்றும் முகாமையாளருடன் தனிப்பட்ட ரீதியிலும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த  தெரிவித்தார்.

தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வங்கிக் கடன் கடும் தாமதத்திற்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு  குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அரச பல்கலைக்கழகங்களுக்குத் தகுதியற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வட்டியில்லா கல்விக் கடன் வருடம் தோறும் இவ்வாறு 4000 தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுகிறது.

தொடர்ந்து இந்த கடன் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஏழாவது மாணவர் குழுவுக்கு கடன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எட்டாவது மாணவர் குழுவுக்கு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன அந்தக் கடனை வழங்குகின்றன.

அதில் மத்திய வங்கியில் எந்த பிரச்சினையும் கிடையாது. எனினும் இலங்கை வங்கி அதனை தாமதப்படுத்தி வருகிறது.  கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நான் தனிப்பட்ட ரீதியிலும் அந்த வங்கியின் முகாமையாளருடன் கலந்துரையாடினேன். அந்த வங்கிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடனும் நான் அது தொடர்பில் கலந்துரையாடியுள்ளேன்.

நாட்டிலுள்ள பிரதான அரச வங்கிகள் இவை. நானும் கூட கடந்த  காலங்களில் அந்த வங்கியில் பணியாற்றியுள்ளேன். இலங்கை வங்கியின் தாமதமே மாணவர்களுக்கு இந்த கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட காரணமாகியுள்ளது.

இந்த மாணவர்களுக்கு கடன் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் கொள்கையாகும்.அந்த வகையில் அமைச்சர் என்ற வகையில் நான் இதில் தலையிடவும் தேவையில்லை. அதிகாரிகளே இதனை மேற்கொள்ள முடியும் என்றார்.

இதன் போது குறிப்பிட்ட வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்பி மேற்படி கடனை பெற்றுக் கொள்ள மாணவர்கள் செல்லும்போது வங்கிகளில் கடுமையான நிபந்தனைகள் பிரயோகிக்கப்படுகின்றன.

இதனால் பெரும்பாலான மாணவர்களுக்கு அந்த கடனை பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்தி அந்த சட்டங்கள் அல்லது நிபந்தனைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், முதலாம் இரண்டாம் மாணவர் குழுக்களுக்கு இவ்வாறு வழங்கப்பட்ட கடனை அந்த மாணவர்கள் முறையாக திருப்பிச் செலுத்தாததும் இதற்கான காரணம். கொவிட் மற்றும் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி அதற்கு காரணமாக இருக்கலாம்.எனினும் அந்த கடன்கள் தற்போது மீள செலுத்தப்பட்டு வருகின்றன என்றார்.