கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று அஞ்சலி செலுத்தினார்.காஷ்மீரின் கார்கில் பகுதியை பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் இணைந்து கடந்த 1999–ம் ஆண்டு மே மாதம் ஆக்கிரமித்தனர். இதை அறிந்த இந்திய ராணுவம், அவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியது. இரு தரப்பினருக்கும் இடையே சுமார் 2 மாதங்களாக நடந்த தீவிரப் போர், ஜூலை 26–ந்தேதி முடிவடைந்தது.
கார்கில் பகுதியில் ஊடுருவிய தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்ததுடன், அப்பகுதியை முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் சுமார் 500 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
கார்கில் போரின் 17–வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு காஷ்மீரின் டிராஸ் பகுதியில் நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டு உள்ளது. நேற்று அப்பகுதிக்கு சென்ற ராணுவ தளபதி தல்பீர் சிங் சுகாக், அந்த நினைவுச்சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், டெல்லியில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில் (அமர் ஜவான் ஜோதி) கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர், கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ராணுவ தளபதி தல்பீர் சிங் சுகாக், விமானப்படை தளபதி அரூப் ராகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், காஷ்மீரின் டிராஸ் பகுதியில் நினைவுச்சின்னத்தில் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் உறவினர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்காக சென்னையில் போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. தென்னிந்திய ராணுவதளபதி ஜக்வீர்சிங் தலைமையில் போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்த போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் வீரவணக்கம் செலுத்தினார். ”பாகிஸ்தான் உடனான கார்கில் போரில் இந்தியாவிற்காக போரிட்ட வீரர்களுக்கு வீரவணக்கம். ‘தாய் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை நான் வணங்குகிறேன்.’ தாய் நாட்டுக்காக போரிட்டு வீரமரணமடைந்தவர்களின் தியாகம் உத்வேகம் அளிக்கிறது,” என்று தனது டுவிட்டரில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.