இன்று நள்ளிரவு ஈஸ்டர் பிரார்த்தனை: வேளாங்கண்ணி ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் குவிகின்றனர்

266 0

 உலகம் முழுவதும் நாளை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நேற்று புனித வெள்ளியையொட்டி வேளாங்கண்ணி கோயிலில் சிலுவையை கிறிஸ்தவர்கள் முத்தி செய்தனர்.இன்று துக்கம் அனுசரித்து வருகின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி நாளாக அனுசரித்து வருகின்றனர். உலக மக்களுக்காக இயேசு கிறிஸ்து, சிலுவை தண்டனையை ஏற்று கொண்ட இந்த தினத்தை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைபிடிக்கின்றனர். இதற்காக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்கால விரதமிருந்து இயேசு கிறிஸ்துவை ஜெபித்து வருவர். சிலுவையில் அறையப்பட்ட 3ம் நாள் இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழும் நாளே ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கடந்த 9ம் தேதி குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் மாலை பாதம் கழுவும் நிகழ்ச்சியும் நடந்தன. நேற்று மாலை பெரிய வெள்ளியை முன்னிட்டு, வேளாங்கண்ணி பேராலய பிரார்த்தனை மண்டபத்தில் சிலுவை முத்தி செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக பேராலய அதிபர் பிரபாகரன் அடிகளார், துணை அதிபரும் பங்குத்தந்தையுமான சூசைமாணிக்கம் அடிகளார் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி, பொதுமன்றாட்டு, சிலுவை ஆராதனை நடந்தது. பின்னர் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் பாதங்களை தொட்டு பேராலய அதிபர் பிரபாகரன் அடிகளார் உள்ளிட்ட பாதிரியார்கள் கண்ணீர் விட்டு முத்தி செய்தனர். பின்னர் சிறிய சிலுவைகள் பிரார்த்தனை மண்டபத்தில் குழுமி இருந்த பக்தர்களிடம் கொண்டு செல்லப்பட்டது. கிறிஸ்தவர்கள் கண்ணீர் மல்க சிலுவையை முத்தி செய்தனர். நள்ளிரவு மரித்த இயேசு கிறிஸ்துவின் உடல் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பேராலய கீழ் ஆலயத்துக்கு பவனியாக கொண்டு செல்லப்பட்டது. கிறிஸ்தவர்கள் ஜெபித்தபடி ஊர்வலமாக சென்றனர். இன்று புனித சனி துக்க நாளாக அனுசரிக்கப்பட உள்ளது. இதனால் பேராலய கோவில்களில் திருப்பலியோ வேறு எந்த சடங்குகளோ நடைபெறாது. இன்று நள்ளிரவு 12 மணி அளவில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலய பிரார்த்தனை மண்டபத்தில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்படும். பின்னர் பாதிரியார்கள் திவ்ய நற்கருணை வழங்குவார்கள். விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.