பாலங்களைக்கூட நிர்மாணிக்கமுடியாத இனவாத அரசு தமிழருக்கு எவ்வாறு தீர்வை வழங்கும்

69 0
சாதாரணமாக எமது தமிழர் பகுதிகளிலுள்ள பாலங்களைக்கூட நிர்மாணிக்கமுடியாத இந்த இனவாத அரசாங்கம், எவ்வாறு தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்கும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு – வட்டுவாகல்பாலத்தின் தற்போதைய நிலை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேவேளை முல்லைத்தீவு மக்களின் போக்குவரத்திற்கு பாரிய பிரச்சினையாக இருக்கின்ற வட்டுவாகல் பாலம் உடனடியாக நிர்மாணிக்கப்படவேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு – யாழ்ப்பாணத்திற்கான A-35பிரதான வீதியில் இந்த வட்டுவாகல் பாலம் காணப்படுகின்றது.

கடந்த 1950ஆம் ஆண்டு காலப்பகுதியளவில் கட்டப்பட்டதாக அறியப்படுகின்ற இந்த வட்டுவாகல் பாலமானது, 70வருடங்களுக்கும் அதிகமான பழமைவாய்ந்த பாலமாகும்.

குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தகாலத்தில் அதிகம் பேசப்பட்ட பாலமாக இந்தப் பாலம் காணப்படுகின்றது.

இறுதியுத்த காலத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையிலிருந்து எஞ்சிய மக்கள் இந்த வட்டுவாகல் பாலத்தின் வழியாகவே வெளியேறியிருந்தனர். அந்தவகையில் இங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்ற பாலமாக இந்த வட்டுவாகல் பாலம் காணப்படுகின்றது.

யுத்தத்தின் பின்னரான சூழலில் எமது தமிழர் பகுதிகளில் நில ஆக்கிரமிப்பு, மதத் திணிப்பு, கடலில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் போன்ற செயற்பாடுகள் அதிகரித்திருக்கின்றன. இதனால் இங்குள்ள தமிழ்மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். அதேபோல் இவ்வாறான மிகமுக்கியமான பாலங்கள் சீரின்மையாலும் எமது தமிழ் மக்கள் பாரிய போக்குவரத்துப் பிரச்சினைகளையும் எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்வாறான பழமைவாய்ந்த பாலங்களை புதிதாக அமைத்துத் தராமல், இங்குள்ள தமிழ் மக்களைத் தொடர்ந்தும் போக்குவரத்துப் பாதிப்புக்களுக்கு உள்ளாக்கவேண்டுமென இந்த இனவாத அரசாங்கம் செயற்படுவதாகவே எம்மால் பார்க்க முடிகின்றது.

குறிப்பாக தற்போது  பழமையான இந்தப் பாலம் அடிக்கடி  உடைவதும், போக்குவரத்துத் தடை ஏற்படுவதும், பின்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் சீரமைப்புப் செய்யப்படுவதுமாக இந்தப் பாலத்தின் நிலை காணப்படுகின்றது.

அதேவேளை ஒரு வழிப் பாதையாக மிகவும் ஒடுங்கிய பாலமாக இந்தப் பாலம் காணப்படுகின்றது. இதனால் ஒருகரையிலிருந்து வாகனங்கள் வரும்வரை, மறுகரையிலிருக்கின்ற வாகனங்கள் காத்திருக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.