சட்டமா அதிபரின் பதவி காலத்தை நீடிப்பது அரசியலமைப்பு பேரவையின் பொறுப்பல்ல

33 0

சட்டமா அதிபரின் பதவி காலத்தை நீடிப்பது குறித்து தீர்மானம் எடுக்கும் பொறுப்பு அரசியலமைப்பு பேரவைக்கு கிடையாது.அரசியலமைப்பு பேரவையை நெருக்கடிக்குள்ளாகும் வகையில் ஜனாதிபதி செயற்படுகிறார் எனச் சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும்,பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொருளாதார  நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டோம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் பொருளாதாரம் இன்றும் கத்தி முனையில் தான் உள்ளது எனச் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடுகிறது.வங்குரோத்து நிலைக்குப் பின்னர் வெளிநாட்டுக் கடன் செலுத்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அரசமுறை கடன் செலுத்தாத காரணத்தால் சேமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுக் கையிருப்பைக் கொண்டு அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.ஆகவே பொருளாதார நெருக்கடியிலிருந்து தற்காலிகமான ஓய்வு மாத்திரமே கிடைக்கப் பெற்றுள்ளன.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் எடுத்த தீர்மானங்களினால் நடுத்தர மக்கள் மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளார்கள்.ஊழல் ஒழிப்பு குறித்து அரசாங்கம் பொறுப்புடன் செயற்படவில்லை. மக்களை நெருக்கடிக்குள்ளாகி அறவிடப்படும் வரி முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை,பாதுகாக்கப்படுவதில்லை.

அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.நிதி இல்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டதை போன்று ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது.இன்னும் 30 நாட்களில் தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பை விடுக்க வேண்டும்.

அரசியலமைப்பு பேரவை இன்று செவ்வாய்க்கிழமை அதன் தலைவர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.சட்டமா அதிபரின் பதவிக் காலத்தை நீடிப்பது குறித்து ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரை இன்று பரிசீலனை செய்யப்படவுள்ளது.

அரசியலமைப்பின் 41 ஆவது உறுப்புரையின் பிரகாரம் உயர் பதவி நியமனங்களுக்காக முன்வைக்கப்படும் பரிந்துரைகளை அனுமதித்தல் அல்லது மீளாய்வு செய்தல் அரசியலமைப்பு பேரவையின் பொறுப்பாகும்.பதவிக் காலத்தை நீடிப்பதை அனுமதிப்பதும் அல்லது ஆராய்வதும் பேரவையின் செயற்பாடல்ல.

இலங்கை அரச நிர்வாக கட்டமைப்பில் இதுவரை 47 சட்டமா அதிபர்கள் பதவி வகித்துள்ளார்கள்.இவர்களில் ஒருவரது பதவிக் காலம் ஒரு நாள் கூட நீடிக்கப்படவில்லை.பதவிக்காலம் நிறைவடைந்ததும் அவர்கள் முறையாகச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்கள்.தற்போதைய சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரட்ணம் 48 ஆவது சட்டமா அதிபரின் பதவிக் காலத்தை மேலும் 06 மாதங்களுக்கு நீட்டிக்க ஜனாதிபதி ஏன் அக்கறை கொள்ள வேண்டும்.

பதவிக் காலம் நிறைவடைந்தவரின் பதவிக் காலத்தை நீடிக்கும் போது அந்த நபர் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் சார்பாகச் செயற்படுவார்.சட்டமா அதிபர் பதவி இன்றியமையாதது.ஜனாதிபதியின் செயற்பாடுகளினால் சட்டமா அதிபர் பதவி மீதான மக்கள் நம்பிக்கை சிதைவடையும்.சட்டமா அதிபர் திணைக்களத்தையும் ஜனாதிபதி தனது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்.