மணல் மாஃபியாவை ஒடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

34 0

தமிழகத்தில் ஆளுங்கட்சி ஆதரவுடன் செயல்படும் மணல் மாஃபியாக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே மணற்கடத்தலை தடுக்க முயன்ற கோட்டாட்சியரை, மணற்கடத்தல் கும்பல் கொல்ல முயற்சித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

உயர் பொறுப்பில் உள்ள கோட்டாட்சியரையே கொலை செய்யும் அளவுக்கு மணல் கடத்தல் கும்பல் துணிகிறது என்றால், அவர்களுக்கு எந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிவதாகவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதேபோன்று, மணற்கடத்தலை தடுக்க முயன்றதற்காக, சேலம் மாவட்டம் மானாத்தாள் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் மீதும், வேலூர் மாவட்டம் சின்ன தோட்டாளம் பகுதியில் சிறப்பு சார் ஆய்வாளர் மீதும், வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீதும் மணற்கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழக அரசு மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.