மேற்கு வங்கத்தில் தொடருந்து விபத்து: 15 பேர் பலி! 60 பேர் காயம்!!

46 0

இந்தியாவின் கிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தில் தொடருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை உள்ளூர் நேரப்படி 8.55 மணிக்கு நியூ ஜல்பைகுரி பகுதியில் நின்று கொண்டிருந்த பயணிகள் தொடருந்து காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்குத் தொடருந்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இறந்தவர்களில் சரக்கு தொடருந்து ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் மற்றும் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸின் காவலரும் அடங்குவர்.

காயமடைந்தவர்கள், சிலிகுரி நகரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நோயாளர் காவு வண்கள் மற்றும் பேரிடர் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த விபத்துக்கு மனிதப் பிழை காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெயவர்மா சின்ஹா ​​செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் பின்புறத்தில் இருந்து சரக்கு தொடருந்துடன் மோதியது என்பது எங்களிடம் உள்ள முதற்கட்ட தகவல் எனவும் விபத்துக்கான காரணம் விசாரணைக்கு பிறகே உறுதி செய்யப்படும் என்று தொடருந்து அதிகாரி சப்யசாச்சி டி செய்தியாளர்களிடம் கூறினார்.

மனிதத் தவறுதான் விபத்துக்குக் காரணம் என்று தொடருந்து வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெயவர்மா சின்ஹா கூறினார். சரக்கு தொடருந்தின் ஓட்டுநர் சிக்னலை புறக்கணித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது என்று அவர்  மேலும் கூறினார்.