சர்வதேச அபிவிருத்திக்கான சங்கத்தின் வருடாந்த மாநாடு 2024 இல் புத்தாக்க விருதை வென்ற இலங்கை எரிசக்தி நிகழ்ச்சித்திட்டம்!

47 0

சர்வதேச அபிவிருத்தி தொழில்வல்லுநர்களுக்கான முதன்மையான அமெரிக்க நிகழ்வான, சர்வதேச அபிவிருத்திக்கான சங்கத்தின் வருடாந்த மாநாடு 2024இல் உயர் கௌரவ விருதினை USAID நிதியுதவியுடன் கூடிய இலங்கை எரிசக்தி நிகழ்ச்சித்திட்டம் (SLEP) பெற்றுள்ளதென்பதை அறிவிப்பதில் அமெரிக்கத் தூதரகம் மகிழ்ச்சியடைகிறது.

குறிப்பாக கொழும்பிலுள்ள பெண்களின் ஆராய்ச்சிக்கான மத்திய நிலைய செயற்பாடுகளுக்கு பயன்படும் வருமானத்தை ஈட்டுகின்ற, அம்மத்திய நிலையத்தில் அமைந்துள்ள மின்கல பரிமாற்ற நிலையத்தை முன்னிலைப்படுத்தி, இலங்கையின் ஸ்லிங் மொபிலிட்டி (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்திற்கு உரித்தானதும் அவர்களால் நடத்திச் செல்லப்படுவதுமான புத்தாக்க முயற்சியான மின்சார வாகனங்களுக்கான சூரிய சக்தியில் இயங்கும் மின்கல பரிமாற்ற நிலையங்களை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டது.

பெண்களின் ஆராய்ச்சிக்கான மத்திய நிலையத்தில் ஜூன் 13ஆம் தேதி நடைபெற்ற ஒரு வைபவத்தில், SLEP மற்றும் ஸ்லிங் மொபிலிட்டியின் பிரதிநிதிகளுக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் ஆகியோர் இந்த புத்தாக்கப் போட்டி விருதை வழங்கினர்.

பெண்கள் மத்திய நிலையத்தில் அமைந்துள்ள இச்செயற்திட்டத்தின் சூரிய சக்தியில் இயங்கும் மின்கல பரிமாற்ற நிலையமானது அந்நிலையத்தின் வருமானத்திற்குப் பங்களிப்புச் செய்வதுடன் நிலைபேறான நகர்ப்புற போக்குவரத்திற்கும் உதவி செய்கிறது என சுட்டிக்காட்டிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்,

“குறிப்பாக இது புத்தாக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தனியார் துறை அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் ஆகியவற்றிற்கான ஒரு சிறந்த உதாரணமாக அமைவதால், இந்த சர்வதேச கௌரவம் இலங்கைக்கு கிடைப்பதைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது.” எனத் தெரிவித்தார். “நாட்டின் எரிசக்தி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காகவும், பொருளாதார அபிவிருத்தியை முன்னோக்கிச் செலுத்துவதற்காகவும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உயர்த்துவதற்காகவும், இலங்கையுடனான தனது பங்காண்மையில் அமெரிக்கா உறுதியுடன் இருக்கிறது.” என அவர் மேலும் தெரிவித்தார்.

“நெருக்கடியின் மத்தியில் உலகம்: நம்பிக்கையின் தீப்பொறிகள்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இவ்வருட மாநாட்டில் நேரிலும் மெய்நிகர் நிலையிலும் பங்கேற்ற 1,500 இற்கும் மேற்பட்டோர் நிலைபேறான அபிவிருத்திக்கான புத்தாக்க அணுகுமுறைகளுக்கு வாக்களித்தனர்.

ஒரு திறன் மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பினூடாக சில்லறை ஏற்பாட்டியல் துறைக்கு செலவு குறைந்த மற்றும் வினைத்திறனான தீர்வுகளை வழங்கிய, USAID இனால் உதவியளிக்கப்பட்ட SLING இனால் செயற்படுத்தப்படும் “360° Sustainable Mobility” எனும் செயற்திட்டமானது தனித்துவமானதாக விளங்கியது. மின்கல சந்தா சேவையொன்றை வழங்குவதன் மூலம் மின்கலங்கள் மற்றும் மின்-மோட்டர் சைக்கிள்களை வாங்குவதற்கான அதிகரித்த ஆரம்ப செலவுகளை குறிப்பிடத்தக்க அளவிற்கு இம்முன்முயற்சி குறைக்கிறது.

உணவு விநியோக சேவைகளுக்காக Uber உடன் இணைந்து, மோட்டர் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான செயலறு நேரத்தைக் குறைத்து பணம் மற்றும் நேரம் ஆகிய இரண்டையும் மீதப்படுத்துவதில் இம்மாதிரி செயற்திட்டத்தின் செயற்திறனை Sling Mobility நிரூபித்துள்ளது.

“இலங்கையின் நகர்ப்புற போக்குவரத்திற்கான ஒரு நிலைபேறான மற்றும் பசுமையான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க படியை USAID உடனான SLING Mobility ஒத்துழைப்பு குறிக்கிறது” என Sling தலைமை நிறைவேற்று அதிகாரியான லவ் யாதவ் கூறினார்.

“சூரிய சக்தியினால் இயங்கும் இந்த “360° Sustainable Mobility” எனும் மின்கல பரிமாற்ற செயற்திட்டமானது ஒரு தொழிநுட்ப ரீதியிலான புத்தாக்கம் மட்டுமன்றி, நேர்மறையான மாற்றத்தை உண்டாக்கும் பங்காண்மைகளின் மாற்றங்களை ஏற்படுத்தும் சக்திக்கான ஒரு சான்றாகவும் விளங்குகிறது.  மற்றும் மின்சார சக்தியைப் பயன்படுத்தும் போக்குவரத்திற்கு அப்பால் எரிசக்தித் துறையில் நிலைபேறான புத்தாக்கங்களை மேற்கொள்வதற்கான ஒரு சாத்தியக்கூறினையும் அது கொண்டுள்ளது.” என அவர் மேலும் கூறினார்.

மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சில்லறை ஏற்பாட்டியல் துறையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை மக்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் USAID SLEP இன் உதவியானது அவர்கள் மீதும் கவனம் செலுத்துகிறது. அதன் முதல் கட்டத்தில், இம்முன்முயற்சியானது 18 சாரதிகளுக்கு பயிற்சியளித்தது, சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு 10 நபர்களுக்கு உதவி செய்தது மற்றும் நான்கு மக்களைச் சென்றடையும் நடவடிக்கைகள் மூலம் 100இற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை சென்றடைந்துள்ளது.

USAID இலங்கை எரிசக்தி நிகழ்ச்சித் திட்டமானது ஆரோக்கியமான, கல்வியறிவுள்ள, மற்றும் வேலை செய்யும் ஒரு மக்கள்தொகையை ஊக்குவிப்பதற்காக இலங்கை மக்களுடன் கொண்டுள்ள பரந்த அமெரிக்க பங்காண்மையின் ஒரு பகுதியாகும். மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும், நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதற்கும், போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் முதலீடுகளை ஆற்றுப்படுத்துவதன் மூலம், இலங்கையின் மின்சாரத் துறையை  சந்தை அடிப்படையிலான, பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நிலைபேறான ஒரு கட்டமைப்பாக மாற்றுவதற்கும் இந்நிகழ்ச்சித் திட்டம் உதவி செய்கிறது.

USAIDஇன் பணிகள் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு usaid.gov/sri-lanka எனும் இணையத் தளத்தினைப் பார்வையிடுவதுடன் X @USAIDSriLanka and Facebook @USAIDSriLankaMaldives ஆகிய பக்கங்களில் எம்மைப் பின்தொடரவும்.

பட விளக்கங்கள்:

படம் 1: ஜூன் 13 ஆம் தேதி கொழும்பிலுள்ள பெண்களின் ஆராய்ச்சிக்கான மத்திய நிலையத்தில் நடைபெற்ற விழாவில், ஸ்லிங் தலைமை நிறைவேற்று அதிகாரி லவ் யாதவ் மற்றும் இலங்கை எரிசக்தி செயற்திட்ட பிரதிநிதி கோசல குணவர்தன ஆகியோரிடம் புத்தாக்கப் போட்டி விருதை வழங்கும் அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங். அமைச்சர் காஞ்சன விஜேசேகரவும் வைபவத்தில் கலந்து கொண்டார்.

படம் 2: கொழும்பிலுள்ள பெண்களின் ஆராய்ச்சிக்கான மத்திய நிலையத்திலமைந்துள்ள புத்தாக்க சூரிய சக்தியில் இயங்கும் மின்கல பரிமாற்ற நிலையத்தில் அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங். விருது பெற்ற USAID-உதவியடனான இலங்கை எரிசக்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியான இந்த நிலையம், நிலைபேறான நகர்ப்புற போக்குவரத்தினை ஊக்குவிப்பது மட்டுமன்றி, ஆராய்ச்சி மற்றும் சமூக நிகழ்ச்சித் திட்டங்களின் ஊடாக உள்ளூர் பெண்களை வலுவூட்டும் இம்மத்திய நிலையத்திற்கு மிகவும் அவசியமான ஒரு வருமானத்தையும் வழங்குகிறது.