தேர்தல் தொடர்பில் இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும்.தேர்தல் இடம்பெறுமாயின் உரிய காலவரைபை தயாரித்துக் கொள்ள வேண்டும். தேர்தலை நடத்துவது எமக்கு பிரச்சினையில்லை.இருப்பினும் தற்போதைய செயற்திட்டத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஏனெனில் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை இன்னும் மீளவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு விடுவிக்கப்பட்டுள்ள மூன்றாம் தவணை தொடர்பில் வெள்ளிக்கிழமை (14) காலை இடம்பெற்ற நிகழ்நிலை முறைமை ஊடான ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இலங்கை முன்னேற்றகரமான நிலையில் இருப்பதை அவதானிக்க முடிகிறது. ஏற்றுக்கொள்ளப்பட்ட செயற்திட்ட நிபந்தனைகள் தாமதமான நிலையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளமை சிறந்ததொரு நிலையாகும்.
இலங்கையின் தற்போதைய சீர்த்திருத்தங்களினால் பொருளாதாரத்தின் ஆரம்பக்கட்டமைக்கு சீரடைந்துள்ளது. நிதி ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் அதிகாரிகளின் வலுவான செயல்பாட்டை நிர்வாக இயக்குநர்கள் பாராட்டினர்.
பொருளாதாரம் மீட்சிப்பெற்றுள்ளது. பணவீக்கம் குறைவாகவே உள்ளது. வருவாய் சேகரிப்பு மேம்பட்டுள்ளது. நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு ஸ்திரமடைந்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போதைய கடன் மறுசீரமைப்பு மற்றும் இடம்பெறவுள்ள தேர்தல்கள் ஆகியவற்றால் பாதிப்புகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் காணப்படுகின்றன.
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், நீண்ட கால உள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு சீர்திருத்த வேகத்தை நிலைநிறுத்துவதற்கும் பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்.
இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்காக கடன் மறுசீரமைப்பை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பணிப்பாளர்கள் வரவேற்றுள்ளனர். உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவாக நிறைவு செய்யவும், சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியுடனான ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இலங்கையில் தேர்தல் ஜனநாயக ரீதியில் இடம்பெற வேண்டும்.உள்ளக தேர்தல் விவகாரங்களில் சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் தலையிடவில்லை. தேர்தல் தொடர்பில் இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும்.தேர்தல் ஒன்று இடம்பெறுமாயின் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி புதிய காலவரைபை தயாரித்துக் கொள்ள வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்றுக் கொண்டுள்ள அத்துடன் தற்போது செயற்படுத்தியுள்ள யோசனைகளையும்,மறுசீரமைப்புக்களையும் தொடர வேண்டும் என்பது அவசியமாகும். ஏனெனில் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் முழுமையாக மீட்சிப்பெறவில்லை என்றார்.