யாழில் ஊடகவியலாளரின் வீட்டைத் தாக்கிய கும்பலை உடன் கைதுசெய்ய வேண்டும்

57 0
ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது வன்முறைக் கும்பல் மேற்கொண்ட தாக்குதலை கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் இந்த வன்முறைக் கும்பலை உடன் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் அதேவேளை ஊடகவியலாளின் பாதுகாப்பை பொலிசார் உறுதிபடுத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் அம்பாறை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

அம்பாறை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஊடகவியலாள் பிரதீபனின் வீட்டின் மீது இடம்பெற்ற தாக்குதலை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை (14) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில்  இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியதுன் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து எரித்துள்ளனர்.

இந்த சம்பவம் ஊடக அடக்கு முறையை பிரதிபலிப்பதுடன் தமிழ் ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட திட்டமிட்ட ஒரு செயலாக பார்க்கின்றோம்.

அதேவேளை தொடர்ந்து தமிழ் ஊடகவியலாளர் மீது குறிவைக்கப்பட்டு தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான வன்முறை மூலம் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாதவர்கள்  ஊடகவியலாள்களின் கழுத்தை நெரிக்க முடியும் என்ற நப்பாசையுடன் இந்த திட்டமிட்ட தாக்குதல்களை மேற்கொண்டுவரும் கோழைத்தனமான ஒரு செயலாகும்.

ஊடகவியலாளரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன் ஊடகவியலாளரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ளவேண்டும் அதேவேளை யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக மக்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் கட்டவித்து விடப்பட்டுள்ள வன்முறை கும்பலை இல்லாது செய்ய வேண்டியது பொலிசாரின் கடமையாகும்.

எனவே பொலிசார் உடனடியாக ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடாத்தியவர்களை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்தப்படவேண்டும் அதேவேளை  ஊடகசுதந்திரம் ஊடகவியலாளர்களும் பாதுகாக்கப்படவேண்டும் இதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.