சம்பள நிர்ணய சபையின் முடிவுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தீர்மானம் !

38 0
தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்துறை தொழிலாளர்களின் சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் எதுவித அடிப்படையுமின்றி 70 வீதத்தால் உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இந்தத் தீர்மானத்திற்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வியாபார நிறுவனங்களின் நீடித்த நிலைத்தன்மைக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பேணவும் சம்பள அதிகரிப்பு உற்பத்தித்திறனுடன் நெருக்கமாக இணைக்கப்பட வேண்டும். என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

தேயிலை உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளிலும், இலங்கை ஏற்கனவே மிக உயர்ந்த உற்பத்தி செலவு, மிக கூடிய நாட்சம்பளம் மற்றும் மிகக் குறைந்த உற்பத்தித்திறனுடன் போராடிக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக, சம்பள நிர்ணய சபையால் (WagesBoard) புதிதாக அறிவிக்கப்பட்ட தேயிலை துறையிலுள்ள தொழிலாளர்களின் சம்பளம், இந்தியாவின் தேயிலைத் துறையிலுள்ள தொழிலாளர்களின் சம்பளத்தைவிட இருமடங்கு அதிகமாக இருப்பதால் உலக சந்தையில் இலங்கை தேயிலையின் உற்பத்தி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த தன்னிச்சையான சம்பள அதிகரிப்பு பிராந்திய தோட்ட நிறுவனங்களை மட்டுமல்லாது, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள 400 க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகள், வெளிப்புற தொழிலாளர்களைப் பயன்படுத்தும் சிறுதோட்டங்களின் உரிமையாளர்கள் மற்றும் அனைத்து இறப்பர் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளையும் பாதிக்கும்.

மேட்படி சம்பள அதிகரிப்பு ஒரு கிலோ தேயிலையின் உற்பத்தி செலவை 1,450 ரூபாவாக அதிகரிப்பதோடு, ஏல விற்பனை சராசரியான 1,250 ரூபாவை விட அதிகமாக இருக்கும் என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பாரிய இழப்பு தொழில்துறையின் நிலைத்தன்மைக்கு கடுமையான நிதிச் சிக்கல்களை ஏற்படுத்தும். தேயிலைத் தொழில்துறை ஏற்கனவே கடுமையான கடன் சுமையில் உள்ளது, தேசிய சம்பள நிர்ணய சபை (Wages Board) கட்டாயப்படுத்திய சம்பள உயர்வினால் ஏற்படும் வியாபார நஷ்டம் நிதித்துறையையும் பாதிக்கும். ஏனெனில், பல தோட்ட நிறுவனங்கள் நிதிநிறுவனங்களிடமிருந்து கணிசமான கடனைப் பெற்றுள்ளன.

இவர்களால் கடனை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், நிதி நிறுவனங்களும் பாதிக்கப்படும். நிதிச் சுமையால் ஏற்படும் தாக்கத்தை வலியுறுத்தும், இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் , 70 வீத சம்பள அதிகரிப்பினால் ஏற்படும் உற்பத்தி செலவு அனைத்து பிராந்திய தோட்ட நிறுவனங்களின் தேயிலை மற்றும் இறப்பர் இலாபத்தை பல மடங்கு விஞ்சியது என்று சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது, தொழிலாளர்கள் நிலையான சம்பளம் மற்றும் உற்பத்தித்திறன் அடிப்படையிலான சூத்திரங்கள் இரண்டிலிருந்தும் வருமானத்தைப் பெறுகின்றனர், இதனுடன் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, (EPF, ETF) Gratuity மற்றும் பிற வழங்கப்படும் சேவைகளும் அடங்கும்.

தொழில்துறை மற்றும் அதன் ஊழியர்களின் நீண்டகால நம்பகத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை நிலையான முறையில் பாதுகாப்பதற்கும் அதனை மேம்படுத்துவதற்குமான உறுதிப்பாட்டை இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மீண்டும் வலியுறுத்துகிறது என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.