இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக உலக பௌத்த மகா சம்மேளனத்தின் இலங்கை கிளை வலியுறுத்தியுள்ளது.
உலக பெளத்த மகா சம்மேளனத்தின் இலங்கை மத்திய நிலையம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பணியகம் ஆகியன இணைந்து இலங்கையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய இனங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை விருத்தி செய்யும் நோக்கில் செவ்வாய்க்கிழமை (11) நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தன.
உலக பௌத்த மகா சம்மேளனத்தின் இலங்கை கிளையின் தலைவர் கலாநிதி சுதத் தேவபுரவின் தலைமையில் கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் மேற்படி சமய நிகழ்வு நடைபெற்றது. அனைத்து மதங்கள் மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தின் மூலம் சமாதானம் மற்றும் ஒற்றுமையை விருத்தி செய்யும் முகமாக இந்நிகழ்வு ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் உலக பௌத்த மகா சம்மேளனத்தின் இலங்கை மத்திய நிலையத்தின் தலைவர் கலாநிதி சுதத் தேவபுர, செயலாளர் ஜயந்த பீரிஸ், சர்வதேச மனித உரிமைகள் பூகோள வழிநடத்தல் தலைவர் கலாநிதி எம். ஏ. சீ. மஹசும், அதன் தலைவர் அமீர் கான், பணிப்பாளர் குபேரலிங்கம், ஆலோசகர் நசீம் மற்றும் ஊடகப்பணிப்பாளர் ஊடகவியலாளர் பஸ்லான் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சர்வமத தலைவர்களால் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் கலாநிதி சுதத் தேவபுரவிற்கு சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கப்பெற்றது. நாட்டு மக்களிடையே ஒற்றுமை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. உலக பெளத்த சம்மேளனத்தின் இலங்கை மத்திய நிலையத்தின் எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இலங்கை பல மத்தவர்களும் ஒற்றுமையுடன் வாழும் நாடு. அரசியல் தலைமைகளின் தலையீடு பொதுமக்களிடையே உள்ள நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. எம்மவர் மத்தியில் சமாதானத்தை ஊக்குவிக்கக் கூடிய வகையில் காலத்துக்கேற்ற சிந்தனைகள் வலுப்பெற வேண்டும். அரசியல் உட்பூசல்களையும் கடந்து மனித உரிமைகள் பணியகம் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்போடு தமது சேவையை வழங்கி வருகிறது. அவர்களின் மகத்தான சேவை மக்களுக்கு அவசியம் என்றார்.