மாகாண சபை முறைமை தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது

85 0

13 ஆம் திருத்தச் சட்டத்திலுள்ள மாகாண சபை முறைமை தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என்பதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக் கொண்டுள்ளது எனவும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கை வெளியான பின்னரே தமிழரசுக் கட்சி இறுதி முடிவு எடுக்கும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திஸ்ஸநாயக்க தலைமையிலான குழுவினருக்கும்  இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான சி.வி.கே.சிவஞானம், எஸ்.குலநாயகம், ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று  செவ்வாய்க்கிழமை (11)  நண்பகல் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்புத் தொடர்பிலே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னேற்ற கரமான பேச்சுவார்த்தை எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கண்டு விடவில்லை. ஆரம்ப கலந்துரையாடல் என்ற போர்வையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வகையிலான கலந்துரையாடல் இடம் பெறுகின்றது.

நம்பிக்கை தருகின்ற பேச்சுவார்த்தையாக இடதுசாரி இயக்கம் என்ற வகையில் அவர்களுடன் எங்களுக்கு இணங்கிச் செல்லக்கூடிய பல விடயங்கள் இருக்கின்றன.

குறிப்பாக ஊழல் ஒழிப்பு, மக்கள் மத்தியில் சம உரிமை என்ற பல விடயங்கள், பொருளாதார சமத்துவம், போன்ற பல விடயங்களில் நேரடியாகவே இணங்கக்கூடியதாக இருந்தது.

தமிழ்த்தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் பழைய சரித்திரங்கள் இருந்தாலும் கூட  அவர் கூறியது போன்று தற்போது இருக்கின்ற மாகாண சபை முறைமையை அப்படியே ஏற்றுக்கொள்வதாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த 13 ஆம் திருத்தச் சட்டத்திலுள்ள மாகாண சபை முறைமை தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கான தீர்வு அல்ல என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள் இதில் இருந்து முன்னேறிச் செல்வதற்கான வழிவகைகளை இரு தரப்பாகவும் இணைந்து பேசி செல்ல வேண்டும். இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு அப்பால் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தாங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள் அதன் பின்னர் அவர்களுடன் நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தையை அடிப்படையாக வைத்து இலங்கை தமிழரசுக் கட்சி உரிய நேரத்தில் முடிவுகளை எடுக்கும் என்றார்.