காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள சென்னையின் 2-வது பசுமை விமான நிலையமான பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுப்புக்கான அறிவிப்பு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கிராம மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இந்த விமான நிலையத்துக்காக மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 5,746 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில் 3,774 ஏக்கர் நிலங்கள் விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடம் இருந்து எடுக்கப்பட உள்ளன. மீதமுள்ள 1,972 ஏக்கர் நிலங்கள் அரசு புறம்போக்கு மற்றும் நீர் நிலைகளாக உள்ளன.இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தில் கிராம மக்கள் 666-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏகனாபுரம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் சிலர் மட்டுமே வாக்களித்தனர். மற்றபடி கிராம மக்கள் ஒட்டு மொத்தமாக தேர்தலை புறக்கணித்தனர்.
இந்த விமான நிலையத்துக்காக மொத்தமாக நிலம் எடுக்காமல் ஒவ்வொரு கிராமமாக நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. ஏற்கெனவே பொடாவூர், மகாதேவி மங்கலம், சிறுவள்ளூர் கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு தேர்தலுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள்: நிலம் எடுப்பு தொடர்பாக அறிவிப்புகள் வந்த நிலையில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து நிலம் எடுப்பது தொடர்பான அறிவிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது தேர்தல் முடிந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மீண்டும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்த அறிவிப்பு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. இதன்படி எடையாப்பாக்கம் கிராமத்தில் 59.75 ஹெக்டர் நிலம் (சுமார் 149.37 ஏக்கர்) கையகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சேபம் தெரிவிக்க விரும்புபவர்கள் 30 நாட்களுக்குள் காரை கிராமத்தில் உள்ள தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு), புதிய பசுமை வழி விமான நிலைய திட்டம், மண்டலம் 2 என்ற அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பொது மக்கள் போராட்டம்: இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தை தீவிரமாக நடத்தி வரும் ஏகனாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் கூடி இது தொடர்பாக விவாதித்தனர். இந்த கிராமத்தில் உள்ள வீடுகள், நிலங்கள் என ஒட்டுமொத்த கிராமமும் கையகப்படுத்தப்பட உள்ளதால் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வருகின்றனர். தமது கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வரும்போது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக விவாதித்துள்ளனர்.