பாதாள உலக கும்பலின் தலைவரான “பஸ் பொட்டா”வை சுட்டுக்கொலை செய்த துப்பாக்கிதாரி கட்டுநாயக்கவில் கைது

31 0

கம்பஹா பிரதேசத்தில் பாதாள உலக கும்பலின் தலைவரான “பஸ் பொட்டா” வை சுட்டுக்கொலை செய்துவிட்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜாவுக்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த துப்பாக்கிதாரி மீண்டும் நாடு திரும்பியதையடுத்து இன்று திங்கட்கிழமை (10) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு, கிம்புலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு  ஜூலை மாதம் கம்பஹா பிரதேசத்தில் பாதாள உலக கும்பலின் தலைவரான “பஸ் பொட்டா” வை சுட்டுக் கொலை செய்துவிட்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இவர்  இன்று (10) காலை 06.07 மணியளவில் சார்ஜாவிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

சந்தேக நபருக்கு எதிராக கம்பஹா நீதிமன்றினால் விமானப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக கம்பஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.