ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதாக குறிப்பிடவில்லை

62 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதாகவும்,அவருக்கு ஆதரவு வழங்குவதாகவும் எந்நிலையிலும் குறிப்பிடவில்லை.பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் திங்கட்கிமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்.ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் அலுவலகத்தை ஆரம்பித்துள்ளோம்.எதிர்வரும் நாட்களில் சகல தேர்தல் தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம்.

நல்லாட்சி அரசாங்கம் முறையற்ற வகையில் பிற்போட்ட மாகாண சபைத் தேர்தல் பற்றி தற்போது எவரும் பேசுவது கிடையாது.மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைவதை முன்கூட்டியதாக அறிந்தே நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் முறைமை திருத்தம் ஊடாக தேர்தலை பிற்போட்டது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுத்துள்ளோம்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு வெகுவிரைவில் அத்தீர்மானத்தை அறிவிப்பார்.எமது தீர்மானத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால ஜனாதிபதியாகவே தெரிவு செய்தோம்.இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்குவதாகவும் அல்லது அவரை வேட்பாளராக களமிறக்குவதாகவும் நாங்கள் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.ஆகவே கட்சியை முன்னிலைப்படுத்திய வகையில் அரசியல் தீர்மானங்களை எடுப்போம் என்றார்.