யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா கலந்து கொண்ட நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டிருந்தார்.
வடமராட்சி கொற்றாவத்தை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் திறன் வகுப்பறையை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
அந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸா கலந்து கொண்டு, திறன் வகுப்பறையை திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டிருந்தார்.
நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பில் அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கையில்,
மாவட்ட கல்வி அபிவிருத்திக்கான இப்பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன்.
இதன்போது, எமது மக்களின் கல்வியை மேம்படுத்துவதன் அவசியத்தையும், அதன் இலக்கில் நாம் இருவரும் பயணிப்பதே எமக்கிடையேயான ஓர் ஒற்றுமையாக உள்ளது.
அதேவேளை, 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக எதிர்கட்சித்தலைவர் வாக்குறுதி வழங்கியுள்ள நிலையில், அதனை வரவேற்பதுடன் எமது மக்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக அறிந்து கொள்ள வேண்டும், அவ்வாறு செய்யும் பட்சத்தில் அதனை நாம் வரவேற்போம் என தெரிவித்தார்.