கோடை விடுமுறை சீசன் காலத்தில் கன்னியாகுமரிக்கு 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

52 0

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.

இந்த ஆண்டும் கோடை விடுமுறை சீசனையொட்டி கன்னியாகுமரியில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோடை விடுமுறை சீசன் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் ஏராளமானோர் திரண்டு சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர்.

விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் படகில் சென்று பார்வையிட்டனர். மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, கலங்கரை விளக்கம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச், விவேகானந்தபுரத்தில் பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் உள்ள உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.கோடை விடுமுறை சீசனையொட்டி கடந்த 2½ மாதங்களில் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்து உள்ளனர்.

இதில் 3 லட்சத்து 84 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மட்டுமே விவேகானந்தர் நினைவு மண்டத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 43 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், மே மாதம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 300 சுற்றுலா பயணிகளும், கோடை விடுமுறை சீசன் முடிந்த நாளான நேற்று வரை 60 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர்.கோடை விடுமுறை சீசனின் கடைசி நாள் அன்று ஒரே நாளில் மட்டும் 7 ஆயிரத்து 600 பேர் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.