தேசிய மக்கள் சக்தியின் நேற்றைய மாநாட்டில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற பொலிஸ் இராணுவ அதிகாரிகள் நீதித்துறையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் கூட்டு என்பது உண்மையில் நியாயபூர்வமான ஜனநாயக அமைப்பு என தெரிவித்துள்ள முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ரவிசெனிவிரட்ண பொலிஸார் மீது தாக்கம் செலுத்தும் நோக்கமோ அல்லது அல்லது பொலிஸ் துறைக்குமீள திரும்பும் நோக்கமோ இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மேடையில் ஏறவேண்டாம் என பல தரப்பினரிடமிருந்து எனக்கு அழுத்தம் வந்தது, எனக்கு மாத்திரமல்ல ஏனைய முன்னாள் அதிகாரிகளிற்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒருவருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் கூட விடுத்துள்ளனர் எனவும் ரவிசெனிவிரட்ண தெரிவித்துள்ளார்.அவர் மொனராகல பொலிஸில் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார், பின்னர் தொலைபேசியில் ஒருவர் அவரை தொடர்புகொண்டு முறைப்பாட்டை விலக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார் எனவும் ரவிசெனிவிரட்ண தெரிவித்துள்ளார்.
ஒய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் கூட்டினை உருவாக்குவதற்கான காரணங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள ரவி செனிவிரட்ண இரண்டு வருடங்களின் முன்னர் நாங்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்துடன் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டோம் நாங்கள் எங்கள் கரிசனைகள் கேள்விகள் எண்ணங்களை பகிர்ந்துகொண்டோம் என தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் இந்த குழுவினர் நேர்மையானவர்கள் என்பதை நாங்கள் உணர்ந்துகொண்டோம் இன்றைய அரசியலில் நேர்மையானர்வகள் குறைவு என ரவி செனிவிரட்ண தெரிவித்துள்ளார்.
மேலும் இவர்கள் தங்கள் நோக்கங்களிற்காக குறிப்பிடத்தக்க தியாகங்களை செய்ய தயாராகயிருக்கின்றார்கள் இது இன்று சமூகத்தில் அரிதாக காணப்படக்கூடிய விடயம்,மேலும் அவர்கள் எங்கள் கேள்விகளிற்கு எல்லாம் தெளிவான பதிலை வழங்கினார்கள் நாட்டை கட்டியெழுப்புவதற்கான தெளிவான திட்டம் இருப்பதை வெளிப்படுத்தினார்கள் அதன் பின்னர் நாங்கள் அவர்களுடன் இணைய தீர்மானித்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.