இலங்கை மின்சார சபையின் நிர்வாகத்தை சீரழித்து 12 பங்குகளாக பிரித்து தனியார்மயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இதனை திருத்தியமைத்து புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
புதிய மின்சார சட்டம் தொடர்பில் உயர் நீதிமன்றம் சென்று மக்கள் உரிமையை ஐக்கிய மக்கள் சக்தி பாதுகாத்துள்ளது. இலங்கை மின்சார சபையின் நிர்வாகத்தை சீரழித்து 12 பங்குகளாக பிரித்து தனியார்மயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இச்சட்டத்தின் மூலம் அமைச்சருக்கு குவிக்கப்பட்ட அதிகாரங்களை எமது ஆட்சியில் குறைப்போம்.
மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள அதானி நிறுவனத்தின் ‘அதானி கிரீன் எனர்ஜி’ காற்றாலை மின் உற்பத்தியின் ஊடாக மின்சாரத்தை 20 வருடங்களுக்கு கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
அதானியிடமிருந்து 32.8 டொலருக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்கின்றனர். இது மக்கள் உரிமையை மீறும் செயலாகும். புதிய மின்சார சட்டத்தின் ஊடாக ஊழல் மேலும் அதிகரிக்கும். ஐக்கிய மக்கள் சக்தியில் ஆட்சியில் இதனை திருத்தியமைத்து புதிய சட்டமொன்றை முன்வைப்போம் என்றார்.