மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பலம் புதிய கூட்டணியிடம் உள்ளது

71 0

நாட்டின் தற்போதைய அத்தியாவசிய தேவை பொருளாதார நிலைமையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். அந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பலம் புதிய கூட்டணியிடம் உள்ளது. எனவே, அதற்காக எம்முடன் கைகோர்க்குமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

புதிய கூட்டணியின் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏற்பாடு செய்திருந்த மக்கள் கூட்டம் சனிக்கிழமை (8) அம்பாந்தோட்டையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நிமல் சிறிபால டி சில்வாவை சுதந்திர கட்சியின் தலைவர் என்றே விழிக்க விரும்புகின்றேன். தற்போது உண்மையான சிறப்பான சுதந்திர கட்சி கட்டியெழுப்பப்பட்டுள்ளது. உத்தேச தேர்தல்களில் மக்கள் ஆணையுடன் பாராளுமன்றம் செல்வதே எமது இலக்காகும். தற்போது புதிய அரசியல் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், நீதிமன்ற அதிகாரம் மக்களிடம் வழங்கப்பட வேண்டும் என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.

அவ்வாறானதொரு முறைமை இதற்கு முன்னர் நாட்டில் நடைமுறையில் இருந்தது. நீதித்துறை அதிகாரம் மக்களிடம் இருந்ததால்தான் 1983இல் நாடு கலவர பூமியானது. எனவே, அவ்வாறானதொரு ஆபத்துக்கு மீண்டும் இடமளிக்க முடியாது. அநுரகுமார திஸாநாயக்க கூறும் அனைத்து கருத்துக்களும் பயனற்றவையே.

தற்போதுள்ள தேவை பொருளாதார நிலைமையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். அதற்காகவே நாம் இணைந்து போராடிக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில் எமது கூட்டணியால் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்தப் பணியில் எம்முடன் கைகோர்க்குமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநிறுத்துவதே எமது குறிக்கோளாகும். எதிர்வரும் மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் என அனைத்தும் இடம்பெறும். அவை அனைத்தையும் எதிர்கொள்ள புதிய கூட்டணி தயாராக உள்ளது என்றார்.