ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் உள்ளக ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீதித்துறை ஊடாக அதனை நாம் உறுதி செய்துள்ளோம். சட்ட ரீதியாக நாமே சுதந்திர கட்சியினராவோம் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
புதிய கூட்டணியின் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏற்பாடு செய்திருந்த மக்கள் கூட்டம் சனிக்கிழமை (8) அம்பாந்தோட்டையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை வைக்க முடியாது என்றும், அவரது தலைமைத்துவத்தின் கீழ் தம்மால் சுதந்திர கட்சியுடன் கூட்டிணைய முடியாது என்றும் இங்குள்ள தரப்பினர் தெரிவித்தனர். ஆனால் தற்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தானாக முன்வந்து இவர்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார்.
தற்போது புதிய கூட்டணி என்ற குழந்தை அம்பாந்தோட்டையில் பிரசவிக்கப்பட்டுள்ளது. அதனை இன்று மக்களிடம் ஒப்படைகின்றோம். மக்கள் தான் அதனை ஊட்டி வளர்க்க வேண்டும். எமது தேவை மீண்டும் குடும்ப ஆட்சியை தோற்றுவிப்பதோ, இராஜகுமாரியையும் இராஜகுமாரனையும் உருவாக்குவதோ அல்ல. ஜனநாயக நாட்டை கட்டியெழுப்புவதாகும்.
தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் உள்ளக ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீதித்துறை ஊடாக அதனை நாம் உறுதி செய்துள்ளோம். சட்ட ரீதியாக நாமே சுதந்திர கட்சியினராவோம். வேறு எவரும் தம்மை சுதந்திர கட்சியினர் எனக் கூறிக்கொண்டு உரிமை கோர முடியாது என்றார்.