அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் பேசுவதற்கே சிலர் அச்சமடைகின்றனர். ஆனால் நான் அதற்கு தயங்குபவன் அல்ல. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 13ஆவது திருத்தம் நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப செயற்றிட்டத்தின் கீழ் கிளிநொச்சி, பாரதி வித்தியாலயத்துக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை (9) கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு உறுதியளித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
பல்வேறு தலைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வழிகளில் பொய்களைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் கூறிவருகிறது. சர்வதேச தொழிலாளர் தினத்தன்றும் அந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.
அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தம் நிச்சயம் அமுல்படுத்தப்படும். வடக்கு, கிழக்கு மாத்திரமின்றி 9 மாகாணங்களிலும் உள்ள மக்களுக்கும் இந்த வாக்குறுதியை வழங்குகிறேன். இதனை நடைமுறைப்படுத்த தயங்கப் போவதில்லை.
இதன் மூலம் இப்பிரதேச மக்களின் அரசியல், மத, சமூக, கலாசார உரிமைகள் பாதுகாக்கப்படும். அடிப்படை உரிமைகள் என்ற அத்தியாயத்தில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகளே உள்ளடங்கியுள்ளன. ஆனால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த அத்தியாயத்தை விரிவுபடுத்தி இதில் பொருளாதார, சமூக, மத, சுகாதார, கல்வி உரிமைகள் வழங்கப்படும்.
13ஆவது திருத்தம் குறித்து பேசும்போது பல தலைவர்கள் ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டு கேட்காதது போல் பாசாங்கு செய்வர். அல்லது அது பற்றிய பேச்சினை உதாசீனப்படுத்துவார்கள். ஒரு சிலர் அது தொடர்பில் பேசுவதற்கு அச்சப்படுகின்றனர். இவ்வாறு பெரும்பாலானோர் சந்தர்ப்பவாதிகளாக நடந்துகொண்டாலும் நாம் இவ்விடயத்தில் நேர்மையாகவே நடந்துகொள்கின்றோம்.
எனவே எவ்வித பேதமும் இன்றி நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். பல்வேறு அரசியல்வாதிகள் வடக்கிற்கு வந்து அரசாங்கத்தின் வளங்களை பகிர்ந்தளித்தாலும், பல்வேறு நன்கொடையாளர்கள் வழங்கிய உதவிகளையே நான் வழங்கி வருகிறேன். எதிர்க்கட்சியில் உள்ள ஏனைய கட்சிகள் பணியாற்றாது இருந்தாலும், நானும் எனது குழுவும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றோம்.
இனவாதத்தைப் பரப்பி தமது வாக்குகளை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கும் அரசியல்வாதிகளிடம் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் தமது வாக்குகள் குறித்து சிந்திப்பவர்களே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், நான் அவ்வாறு செயற்படவில்லை.
வட மாகாணத்திலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம். இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படாத வரலாற்றுச் சிறப்புமிக்க செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்திய இந்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் தலைவரான பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தி செய்து தருவேன் என உறுதியளிக்கிறேன்.
இப்பிரதேசத்தில் தனியான கைத்தொழில் பேட்டைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைத்துத் தரப்படும். இந்தியாவில் உள்ள நவீன தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு நாட்டிலும் அதுபோன்ற நிறுவனங்களை நிறுவி, சர்வதேச தரத்தில் அமைந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவ நிறுவனங்கள் நிறுவப்படும். இதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஒத்துழைப்பைக் பெற்றுக்கொள்வோம் என்றார்.