நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்ஷர்களுடன் கலந்துரையாடவில்லை

51 0

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்ஷர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டிய தேவை எமக்கில்லை. பெசில் ராஜபக்ஷவுக்கும், ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றதாக வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என ஐக்கிய குடியரசு முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘இரண்டு தடவைகள் சஜித் சந்தித்தும் கதவை மூடி விட்டு புதிய பாதையை உருவாக்க இரகசிய சந்திப்பில் பாட்டலி, பெசில் என்று தலைப்பிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய குடியரசு முன்னணி கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி தேசியத்துக்காக ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் நாட்டை கட்டியெழுப்பும் செயற்றிட்டத்தை வெளிப்படுத்தினோம்.

இந்த மாநாட்டுக்கு ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுக்கும் மற்றும் சிவில் அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்தோம். ஆனால், பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டிய ராஜபக்ஷர்கள் தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது பயனற்றது. ஆகவே பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக்கூற வேண்டிய பெசில் ராஜபக்ஷவுடன் எமது கட்சியின் தலைவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்பதை குறிப்பிட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.