இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முக்கியமான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதை மையப்படுத்தி தொடர்ந்தும் பணியாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை சந்தித்த வேளையிலேயெ அவர் இந்தக் கருத்தினை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த தலைமை இராஜதந்திரிகளின் அமர்வில் பங்கேற்றிருந்தார்.
இதில் பங்கேற்பதற்கச் சென்றிருந்த ஜுலி சங் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக்குடன் உரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.
இந்தச் சந்திப்பு தொடர்பில் வெளிப்படுத்தியுள்ள அவர், இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முக்கியமான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதை மையப்படுத்தி தொடர்ந்தும் பணியாற்ற எதிர்பார்த்துள்ளேன்.
தூதுவர் ஜூலி சங்குடனான சந்திப்பது அருமையாக இருந்தது – நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் தொடர்வதற்கு அமெரிக்க தூதுவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளேன் என்றார்.
இதேவேளை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிதிக் கழகத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி நிஷா பிஸ்வாலை சந்தித்தும் உரையாடியுள்ளார்.
இதன்போது, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தினை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு 553 மில்லியன் டொலர்கள நிதி உதவியை செயற்படுத்துவது பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கும், இலங்கையில் தனியார் துறையின் முன்னணி வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேம்படுத்திக்கொள்வதற்கும் மேற்குறித்த நிதி பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செயலாளர் அன்டனி பிளிங்கனையும் சந்தித்து உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.