சைபர் கிரைம் விசாரணையில் கோவை மாநகர காவல் துறையினர் மாநிலத்தில் முதலிடம்

106 0

சைபர் கிரைம் புகார்கள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளில், மாநில அளவில் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் முதலிடம் பிடித்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பணப் பரிமாற்றங்களை நேரடியாக மேற்கொண்டு வந்த சூழல் மாறி, தற்போது செல்போன், ஆன்லைன் வாயிலாக பணப் பரிமாற்றங்கள் அதிகரித்துள்ளன. செல்போனில் வங்கியின் செயலிகளை பதிவிறக்கம் செய்தும், நெட் பேங்கிங், ஜிபே போன்ற முறைகள் வாயிலாகவும் எவ்வளவு பெரிய தொகைகள் என்றாலும் நொடிப் பொழுதில் பரிமாற்றம் செய்து விடுகிறோம்.தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளதோ அதே அளவுக்கு, மோசடிகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. வங்கியில் இருந்து பேசுவதாக கூறியும், போலீஸார் பேசுவதாக கூறியும், பரிசுத் தொகை விழுந்துள்ளதாக கூறியும், ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறியும், பகுதி நேர வேலை வாய்ப்பின் மூலம் வருவாய் ஈட்டலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபடுகின்றன. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் சைபர் கிரைம் மோசடிகள் தொடர்பாக 3,352 புகார்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், கடந்த 5 மாதங்களில் சைபர் கிரைம் மோசடிகள் தொடர்பான புகார்களில் சிறப்பான விசாரணை நடத்தல், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்தல், பணத்தை மீட்டல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு மாநில அளவில் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் முதலிடம் பிடித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் கூறும்போது, ‘‘சைபர் கிரைம் குற்றங்களைத் தடுக்க தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதேசமயம், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் வழக்குப்பதிந்து தொடர்ச்சியாக விசாரிக்கப்படுகிறது. மாநகர சைபர் கிரைம் காவல் துறையில் கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை மோசடிகள் தொடர்பாக 3,352 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இதில் நிதி சார்ந்த மோசடிகள் தொடர்பாக 2,446 புகார்களும், நிதி சாராத மோசடிகள் தொடர்பாக 906 புகார்களும் பெறப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.53.07 கோடி பணத்தை இழந்ததாக புகார்கள் வந்துள்ளன. இதில் ரூ.4.31 கோடி தொகை பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மோசடி வழக்குகள் தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 பேர் குண்டர் தடுப்புப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட காலங்களில் சைபர் கிரைம் புகார்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை, எடுக்கப்பட்ட நடவடிக்கை என 10 வகையான பிரிவுகளில் மாநில அளவில் மற்ற மாநகர மற்றும் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையங்களை ஒப்பிடும் போது, கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பிடித்துள்ளனர்’’ என்றனர்.