நடப்பு பருவத்துக்கு தேவையான உரம், இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தகவல்

55 0

நடப்பு பருவத்துக்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு பருவத்திலும் கூட்டுறவுத் துறையின் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வேளாண்மைப் பணிகளுக்குத் தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு வேளாண்மைத் துறையுடன் ஒருங்கிணைந்து விவசாய பெருமக்களுக்கு தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை உள்ள நடப்பு காரீப் பருவத்தில் வேளாண்மை பணிகளுக்குத்தேவையான உரம், இடுபொருள் களைப் பொறுத்தவரை யூரியா 30,000 மெட்ரிக் டன், டி.ஏ.பி 15,000மெட்ரிக் டன், எம்.ஓ.பி 9,200 மெட்ரிக்டன் காம்ப்ளக்ஸ் 21,600 மெட்ரிக் டன் என மொத்தம் 75,800 மெட்ரிக் டன் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், டான்பெட் இருப்புக் கிட்டங்கிகளில் யூரியா 4,500 மெட்ரிக் டன், டி.ஏ.பி 2,700 மெட்ரிக் டன், எம்.ஓ.பி 3,700 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 5,400 மெட்ரிக் டன் என மொத்தம் 16,300 மெட்ரிக் டன்கள் இருப்பாக உள்ளது. இவைதவிர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயிர் கடன் பெற்று பயிர்களை விளைவித்து பயன்பெறுமாறு கோட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.