தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஓய்வூதியர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில், தமிழக அரசுபுதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டது.அதில், அதில் அரசு ஊழியர்களுக்கு 1.7.2021 முதல் 30.06.2025 வரையிலும், ஓய்வூதியர்களுக்கு 1.7.2022 முதல் 30.06.2026 வரையிலும் தொடர்ந்து 4 ஆண்டுகள் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தைஅமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த திட்டம் குறிப்பிட்ட நோய்களுக்கு ரூ.10 லட்சம் வரை மருத்துவ உதவி பெறவும் வகைசெய்கிறது.
இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை பெறும்வகையில், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான பொது மற்றும் நிதி வழிகாட்டு முறைகளைச் சமர்ப்பித்து, அவற்றுக்கு ஒப்புதல் வழங்குமாறு தமிழ்நாடு சுகாதாரத் திட்ட மாநில இயக்குநர், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த வழிகாட்டு முறைகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை பெறமுடியும். சிகிச்சை பெற விரும்புவோர், மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையுடன், சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில் இதற்கென பணியில் இருக்கும் ஒருங்கிணைப்பு அலுவலரை அணுக வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான முன் அனுமதி பெற்ற பின்னர், சிகிச்சையை தொடங்க வேண்டும். எனினும், எதிர்பாராத சூழல் ஏற்பட்டால், மருத்துவசிகிச்சையை உடனடியாக தொடங்கி,பின்னர் அடுத்த 48 மணி நேரத்துக்குள் முன் அனுமதி மற்றும் தேவையான இதர ஆவணங்களைப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.