யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர், கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (08.06.2024) இடம்பெற்றுள்ளது.
யாழில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரொருவர் சுன்னாகம் ஈவினை பகுதியில் மறைந்துள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், வெளிநாட்டில் வசித்து வரும் நபரின் வீட்டில் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து அந்த வீட்டிற்கு விரைந்த பொலிஸார், மூன்று கஜேந்திரா வாள்கள், நான்கு வாள்கள், முகத்தினை மறைக்கும் துணிகள் , ஜக்கெட் , தலைக்கவசம் என்பவற்றை மீட்டுள்ளனர்.
வீட்டின் உரிமையாளரான வெளிநாட்டில் வசிக்கும் நபருக்கும், கைது செய்யப்பட்ட நபருக்கும் இடையிலான தொடர்பு குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், வெளிநாட்டில் வசிக்கும் நபருக்கு குறித்த இளைஞன் யாழில் கூலிப்படையாக இயங்கி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், குறித்த நபரின் தொலைபேசி தொடர்புகள் மற்றும் வங்கி கணக்கு விபரம் தொடர்பிலான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.