பாகிஸ்தானில் ஜாதவுக்கு மரண தண்டனை: குற்றப்பத்திரிக்கை நகலை கேட்கிறது இந்தியா

237 0

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் இந்தியா சார்பில் குற்றப்பத்திரிக்கை நகல் கேட்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை உளவு பார்த்ததாக குல்பூஷன் ஜாதவ் என்னும் இந்தியரை கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் பலுசிஸ்தானில் வைத்துக் கைது செய்தனர். குல்பூஷன் ஜாதவ் முன்னாள் கடற்படை அதிகாரி என்பதை ஒப்புக்கொண்ட இந்தியா, அவர் உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டதாக பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்தது.

இது முன்கூட்டியே திட்டமிட்ட செயல் என்றும், இந்திய முன்னாள் கடற்படை அதிகாரியை பாகிஸ்தான் தூக்கில் போட்டால் இரு நாடுகளின் உறவிலும் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் எச்சரித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பான குற்றப்பத்திரிக்கையின் நகலை இந்தியாவிடம் வழங்கக் கோரி இந்திய உயர் ஆணையாளர் கவுதம் பாம்பவாலே கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தூதரக அதிகாரிகளை சந்திக்க அனுமதி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுவரை இந்தியா தரப்பில் 13 முறை குல்பூஷன் யாதவை சந்திக்க அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், 14வது முறையாக பாகிஸ்தான் அரசிடம் இந்தியா அனுமதி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.