காசாவில் 80%-ஐ நெருங்கும் வேலையின்மை: மக்கள் நிதி நெருக்கடியில் தவிப்பு

48 0

மத்திய காசாவில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் இருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 15 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதனிடையே, காசாவில் வேலையில்லா திண்டாட்டம் 80 சதவீதத்தை நெருங்குவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், உலக தலைவர்கள் போர் நிறுத்ததுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், இஸ்ரேல் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல், கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று காசாவில் ஐ.நா நடத்தும் பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, மத்திய காசாவில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் இருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 15 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 77 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 221 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சமீபத்திய போர்நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸ் பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என எகிப்திய மற்றும் கத்தார் மத்தியஸ்தர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, காசாவில் வேலையில்லா திண்டாட்டம் 80 சதவீதத்தை நெருங்குகிறது என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்க் பகுதியில் வேலையின்மை கிட்டத்தட்ட 32 சதவீதத்தை எட்டியுள்ளது. அதோடு அப்பகுதி மக்கள் ஊதிய குறைபாடு என்ற பிரச்சினையையும் எதிர்கொண்டு வருகின்றனர். இதனால், காசா மக்கள் நிதி நெருக்கடியில் தவித்து வருகின்றனர்.

அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 36,731 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 83,530 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸின் தாக்குதல்களால் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.