வடகொரியா-அமெரிக்கா இடையே போர் மூளும்: சீனா எச்சரிக்கை

272 0

வடகொரியா-அமெரிக்கா விவகாரத்தில் எந்த நேரத்திலும் போர் மூளலாம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.

அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தி வரும் வடகொரியா, ஐ.நா.சபை விதித்த பொருளாதார தடைகளை மீறி அவ்வப்போது அணுகுண்டு சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று(சனிக்கிழமை) வடகொரியா மீண்டும் அணுகுண்டு சோதனையில் ஈடுபடலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. மேலும் தனது போர் விமானங்களையும், போர்க்கப்பல்களையும் கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்கா குவித்து வருகிறது. இதனால் வடகொரியாவுக்கு எதிராக எந்த நேரத்திலும் அமெரிக்க ராணுவம் போரில் குதிக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில், சீன வெளியுறவு மந்திரி வாங் யி நேற்று பெய்ஜிங் நகரில் பிரான்ஸ் வெளியுறவு மந்திரி ஜீன் மார்க்குடன் கூட்டாக அளித்த பேட்டியில், “வடகொரிய விவகாரத்தில் எந்த நேரத்திலும் போர் மூளலாம். இந்த போரில் யாருக்கும் வெற்றி கிடைக்கப்போவதில்லை. இதனால் இப்பிராந்தியத்தில் பதற்றம்தான் ஏற்படும். எனவே பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும்” என்றார்.

இதற்கிடையே வடகொரியா மீது அமெரிக்கா போரைத் தொடங்கினால், தென்கொரியாவில் வசிக்கும் தனது நாட்டின் 60 ஆயிரம் குடிமக்களை எப்படி பாதுகாப்பாக வெளியேற்றுவது என்பது குறித்து ஜப்பான் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் நேற்று தீவிர ஆலோசனை நடத்தியது.