பொது இடங்களில் மதுபானசாலை அனுமதிபத்திரம் வழங்குவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்

47 0

அரசாங்கம் விநியோகித்துவரும் மதுபான உரிமப்பத்திரம் வழங்கும் திட்டம் போதையற்ற தேசத்தை உருவாக்கும் கொள்கைக்கு எதிரானதாகும். அத்துடன் சுற்றுலாத் தொழில் முன்னெடுக்கப்படாத கிராமங்களுக்குள்ளேயும் இதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (8) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அரசாங்கம் கடந்த காலங்களில் மதுபான உரிமப்பத்திரம் வழங்கும் திட்டத்தை வேகமாக முன்னெடுத்துள்ளது. இது போதையற்ற தேசத்தை உருவாக்கும் கொள்கைக்கு எதிரானதாகும். சுற்றுலாத் துறையை மையமாகக் கொண்டு இந்த வசதிகளை வழங்குவது சுற்றுலாத் துறையின் ஒரு பகுதியாக அமைந்திருந்தாலும், சுற்றுலாத் தொழில் முன்னெடுக்கப்படாத கிராமங்களுக்குள்ளேயும் இதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

விகாராதிபதிகள் அடங்களாக பிற மத தலைவர்கள், பொதுமக்கள், சிவில் அமைப்புகள் இதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். எனவே, மதஸ்தானங்களுக்கு அருகாமையில், பாடசாலைகளுக்கு அருகாமையில், சுற்றுலாத் தொழில் முன்னெடுக்கப்படாத பிரதேசங்களில் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தால் அவற்றை ஆராய்ந்து, பொருத்தம் இல்லாத இடங்களில் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் ரீதியாக தமதாக்கிக் கொள்ளும் நோக்கில், பல்வேறு நபர்களுக்கு, பல்வேறு வகையான மதுபான அனுமதிப்பத்திர இலஞ்சம் வழங்கும் விளையாட்டு இனியேனும் நிறுத்தப்பட வேண்டும். சுற்றுலாத்துறையை அண்டியுள்ள இடங்களில் முறையாக இதனை விநியோகிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை.

அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேறு பெயர்களில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதை ஆரம்பமாக இந்த சபையில் வெளிப்படுத்தியது நானாகும். அதனால் இதில் மக்கள் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.