ஈழத் தமிழர் போராட்டப் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் இயக்கத்தில் உருவான ‘கடல் குதிரைகள்’ திரைப்படத்தின் இசை மற்றும் அறிமுகக் காட்சி வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது.அனுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீதான ‘எல்லாளன்’ ஈரூடகத் தாக்குதல் நடவடிக்கையின் பின்னணியில் எடுக்கப்பட்ட ‘எல்லாளன்’ திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு தமிழீழ எழுச்சிப் பாடல்களுக்கு இசையமைத்த ‘வேதம் புதிது’ தேவேந்திரன் மற்றும் சியாம் இசையில் உருவாகியிருக்கும் ‘கடல் குதிரைகள்’ திரைப்படத்தின் இசை மற்றும் அறிமுகக் காட்சி வெளியீட்டு நிகழ்வு நாளை சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது.
வேலூர் விஐரி பல்கலைக் கழக நிறுவனர்-வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் ‘கடல் குதிரைகள்’ திரைப்படத்தின் இசைத்தட்டை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா வெளியிட ‘புரட்சித் தமிழன்’ சத்தியராஜ் பெற்றுக்கொள்கிறார்.’உணர்ச்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், இந்திய திரைப்பட சம்மேளனத்தின் துணைத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் விக்கிரமன் ஆகியோர் கூட்டாக திரைப்படத்தின் அறிமுகக்காட்சியை வெளியிட்டு இணையத்தளத்தில் தரவேற்றம் செய்துவைக்கிறார்கள்.
ஸ்ரிபன் புஸ்பராஜா மற்றும் லிங்கம் ஆகியோரின் இணைத்தயாரிப்பில் குளோபல் மீடியா இன்வெஸ்ற் அஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கடல் குதிரைகள்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ‘கடல் குதிரைகள்’ படக்குழுவினர், அனைவரையும் அன்போடு அழைக்கிறார்கள். அனைவரும் வருக.
தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்தில் கடந்த பெப்ரவரி 26 அன்று தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் சார்பில் இசை மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.