சித்திரை புதுவருடத்திலும் வீதியில் – பன்னங்கண்டி மக்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை எனவும் ஆதங்கம்

322 0
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி கிராம மக்கள் இன்று வெள்ளிக்கிழமை 24 நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இன்று சித்திரை புதுவருட தினத்திலும் தங்களது கொட்டில் வீடுகளில் இருந்து வருடப்பிறப்பை கொண்டாட முடியாத நிலையில் 24 நாளாகவும் வீதியில் இருப்பதாகவும் தங்களை எவரும் கண்டுகொள்ளவில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
நிரந்தர காணி கோரி பன்னங்கண்டி மக்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்கள்,
தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்செயல்களால் பாதிக்கப்பட்டு இங்கு வந்த மக்கள் அன்று முதல் இன்று வரை தனியார் காணிகளில் குடியிருந்து வருகின்றார்கள், இவர்களுக்கான சொந்த காணிகள் இன்மையால் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை, முக்கியமாக வீட்டுத்திட்டம் இன்மையால் இவர்களின் வாழ்க்கை மிகவும் நெருக்கடியான நிலைமைக்குள் காணப்படுகிறது.
எற்கனவே வறுமைக்குள் வாழ்கின்ற மக்களுக்கு சொந்தமாக காணி இன்மையால் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட உதவிகள் கிடைக்காமல் இருப்பது இவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவேதான் தங்களுக்கான காணி உரிமம் கேட்டு மேற்படி கவனயீர்ப்பை 24 நாளாகவும் மேற்கொண்டு வருகின்றனர்.
தங்களது விடயத்தில் ஊடகங்களை தவிர பொறுப்பு வாய்ந்த எவரும் அக்கறை செலுத்தவில்லை, தோர்தல் காலங்களில் வீதி வீதியாக வந்து வாக்குகளை பெற்று பதவிகளில் இருப்பவர்களும் எங்களின் விடயத்தில் நடவடிக்கைகளை எடுப்பதாக தெரியவில்லை எனவும் பன்னங்கண்டி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.