ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்பது ஜனநாயகத்தின் உச்சத்தைத் தொடும் முடிவு என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் கருணாநிதி கண்காட்சியை விசிக தலைவர் திருமாவளவன் நேற்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கருத்து கணிப்புகளை நான் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. கடந்த 10 ஆண்டுகால இருண்ட ஆட்சி, இந்தியாவை அகலபாதாளத்தில் சரிய வைத்திருக்கிறது. நாளை அதற்கு விடிவு தெரியும்.
இந்தியாவை சூழ்ந்த இருள் அகலும். புதிய வெளிச்சம் பிறக்க உள்ளது. இண்டியா கூட்டணியின் ஆட்சி மலரும். இதில் தமிழகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கும். குறிப்பாக, திமுக தலைவரின் பங்களிப்பு மகத்தானது. இந்த வெற்றிக்கு பின்னர் அது மேலும் உறுதிப்படுத்தப்படும்.
தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பு இல்லை. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். ஜனநாயகத்தை காப்பதற்காக ஒருமித்த கருத்துள்ள கட்சிகளின் அணியே இண்டியா கூட்டணி. தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.
இதற்கான புரிதலும் இண்டியா கூட்டணி கட்சிகளிடம் உள்ளது. அதனால்தான் பிரதமர் வேட்பாளர் யார் என அறிவிக்காமலேயே தேர்தலை சந்தித்தோம். தேர்தல் வெற்றிக்குப் பிறகு குறைந்தபட்ச செயல் திட்டத்துக்கான குழு உருவாக்கப்பட்டு, பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்க இடமிருக்கிறது. அனைத்தையும் ஜனநாயகப்பூர்வமாக தீர்மானிப்போம் என்பதே இண்டியா கூட்டணியின் சிறப்பம்சமாகும்.
ஐந்து ஆண்டுகளில் 5 பிரதமரை உருவாக்கப்போகிறோம் என்று தற்போதைய பிரதமர் விமர்சித்தார். இதன் மூலம் இண்டியா கூட்டணி வெல்லப் போகிறது என்ற உண்மையை பிரதமர் மோடியே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஒருவரே பிரதமராக இருந்து 10 ஆண்டுகள் ஆண்டபோதிலும், இந்தியா பொருளாதாரத்தில் பெரிய வீழ்ச்சியை கண்டிருக்கிறது, இந்தியாவில் இதுவரை இப்படிப்பட்ட மோசமான ஆட்சி இருந்ததில்லை.
எனவேதான், ஆண்டுக்கு ஒரு பிரதமர் இருந்தால் தவறு இல்லை என கூறினேன். அது ஜனநாயகத்தின் உச்சத்தைத் தொடும் ஒரு முடிவு. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏ-க்கள் தாயகம் கவி, எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.