யாழில் பசுவதைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

73 0

அராலி பகுதியில் பசுவதைத் தடைச் சட்டம் கோரி சைவ அமைப்புக்களின் பங்கேற்புடன் பசு மாடுகளை வீதிக்கு கொண்டுவந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது அராலி தெற்கு அருள்மிகு கருப்பட்டிப் பிள்ளையார் கோயிலடியில் இன்று (02.06.2024) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் இரண்டு பசுக்களை கொலை செய்யும் கொலைக் களங்கள் முற்றுகையிடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் குறித்த போராட்டம் அமைந்துள்ளது.

அரசே உடனடியாக பசுவதைச் சட்டத்தை நடைமுறைப்படுத்து, மாட்டிறைச்சி கடையை ஒழிக்கும் கட்சி மற்றும் வேட்பாளருக்கே எமது வாக்கு, வெட்டாதே வெட்டாதே கன்றுடன் பசுவை வெட்டாதே, இலங்கை சிவபூமி பசுக்கள் எமது தெய்வங்கள், கன்றுத்தாச்சி பசுக்களை கொல்பவர்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியிருந்துள்ளனர்.

உருத்திரசேனையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மறவன்புலவு சச்சிதானந்தம், ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா, மாணவர்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.