தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் முனகிக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றனர்

59 0

தமிழ் பொது வேட்பாளர் நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றென தெரிந்தும் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் முனகிக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அத்தனை பேரும் தான் பிரபாகரன் உருவாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பை அழித்தவர்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது கல்லில் நார் உரிக்கும் செயற்பாடு என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் ஒன்றுபட போவதில்லை.

அப்படி ஒன்றுபட்டு நின்று தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தினால் அதற்கு ஆதரவாக பிரச்சாரங்களை முன்னெடுக்க நான் மட்டுமல்ல தமிழ் மக்கள் ஓரணியாகுவார்கள், வெற்றியும் பெறலாம். தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒரு நிலைப்பாடு, தமிழரசுக் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடு, ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணி ஒரு நிலைப்பாடு. தமிழ்த் தேசியப் பரப்பிலே மக்கள் ஆதரவு கொடுக்கும் இக் கட்சிகளே ஒன்றாக இல்லை.

பதவிப் போட்டிகளை தீர்க்க முடியாத கட்சிகள் மக்கள் பிரச்சினையை தீர்ப்பதாக கூறுவது ஏமாற்று வேலையாகும். ஆக மொத்தத்தில் சஜித், ரணில், ஆனுர, பகிஷ்கரிப்பு, தமிழ் பொது வேட்பாளர் என்ற பஞ்ச நிலை முடிவுகளை தான் மக்கள் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள்.

மக்களின் இந்த முடிவுகளுக்கு தமிழ் கட்சிகளைத் தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது. பொது வேட்பாளர் விடயம் பல படிகளை தாண்ட வேண்டியிருக்கும். யார் வேட்பாளர், எந்த கட்சியில் போட்டியிடுவது, வடக்கா, கிழக்கா, ஆணா, பெண்ணா. ஒவ்வொரு கட்சிகளும், தலைமைகளும் எடுக்கின்ற நிலைப்பாட்டுக்கு மாறான கருத்துக்களை அதே கட்சியை சேர்ந்தவர்கள் எடுக்கின்ற நிலைப்பாடும் வரும். தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரனும், சிறிதரனும் ஒரே கருத்தில் இல்லை.

அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணிக்கு வராது விட்டால் தமிழ் மக்கள் ரணிலுக்கு, அனுரவுக்கு, சஜித்துக்கு, தமிழ் பொது வேட்பாளருக்கு என வெவ்வேறு தீர்மானங்களை எடுப்பார்கள். சிலர் பகிஷ்கரிப்புக்கும் செல்வார்கள்.

எந்தவொரு தமிழ் கட்சியினதும் கோரிக்கைகளை ஏற்காமல் தம் இஸ்டப்படியே மக்கள் வாக்குச் சாவடிக்கு செல்வார்கள். தமிழ் தலைமைகள் பூ மிதித்தல் என ஆசையூட்டி மக்களை தீ மிதித்தலுக்குள் தள்ளிவிடுதல் பெரும் ஆபத்தானதாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நாம் ஆதரிக்கவில்லை. ஐந்து வருடங்களில் என்ன மாற்றம் வந்தது தமிழ் வேட்பாளரை ஆதரிக்க, சஜித்துக்கு வாக்களித்தோம் அவர் வெல்லவில்லை. வென்றிருந்தால், மைத்திரி போல் ஏமாற்றி இருந்தால் அவரை விட்டு விடலாம்.

ரணிலுக்கும் நாம் வாக்களிக்கவில்லை. ஆகவே நாம் வாக்களித்தவர்களோ, வாக்களிக்காதவர்களோ இன்னும் வெற்றி பெறவில்லை அனுரகுமார உட்பட. அதை விட மக்கள் மனங்களை, மக்களின் நாடித்துடிப்பை கண்டறிந்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் மக்கள் முடிவெடுத்த பின்னரே கட்சிகளும், தலைமைகளும் முடிவு எடுத்திருக்கின்றன.

பட்டுணர்ந்தும் தமிழ் கட்சிகள் ஒன்றுபட மறுப்பது துரதிஸ்டமானது. தமிழ் மக்களின் சாபக்கேடானது, அம்பாறை பறிபோய்விட்டது. அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் திருகோணமலையில் பறிபோய்விடும்.

ஒற்றுமையாக தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருந்தே சில நூறு வாக்குகளால் தான் சம்பந்தன் ஐயா வென்றார்.இப்போ பிரிந்திருப்பது திருமலை யை பறிகொடுக்கத்தான்.

வன்னியிலும் இதே நிலைதான் பிரிந்து சென்றால். இப்படியிருக்க ஜனாதிபதி தேர்தலில் இராமன் வென்றாலும் இராவணன் வென்றாலும் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என சொல்லிக் கொண்டு முட்டாள் தனமான முடிவு களை எடுக்காமல் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.