கடந்த 24 மணித்தியாலங்களில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவிசாவளை – புவக்பிட்டிய, ஹெலிஸ்டன் தோட்டப் பகுதியில் வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் தங்கியிருந்த வீடு வெள்ளத்தில் மூழ்கியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இதன்படி, 78 வயதான முதியவர் ஒருவரும் 36 வயதான அவரது மகளும் 7 வயதான சிறுமி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தெய்யந்தர பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர். இதன்படி, 20 மற்றும் 27 வயதுடைய இரண்டு ஆண்களே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாடளாவிய ரீதியில் மழையுடனான வானிலை நீடிப்பதால், கடந்த 24 மணித்தியாலத்தில் எகலியகொடையில் 427 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன் இங்கிரியவில் 348 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் அக்குரஸ்ஸவில் 283 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் சாலாவயில் 280 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பாலிந்துநுவரவில் 276 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் தெரனகலவில் 267 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி, களு, கிங் மற்றும் நில்வலா கங்கைகளை சூழவுள்ள தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி களுகங்கையின் மேல்பகுதியில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், இதன் காரணமாக அடுத்த 48 மணித்தியாலங்களில் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, நிவித்திகல, குருவிட்ட, அயகம, எலபாத்த, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் காணப்படுகிறது.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட மற்றும் மில்லனிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நில்வலா கங்கையின் மேல் பகுதியில் நேற்று இரவு முதல் பெய்துவரும் பலத்த மழை காரணமாக பஸ்கொட, கொட்டபொல, பிட்டபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, கம்புருபிட்டிய, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் காணப்படுகின்றது.
மேலும், கிங் கங்கையின் மேல் பகுதியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நெலுவ, தவலம, நாகொட, நியாகம, வெலிவிட்டிய திவித்துர, எல்பிட்டிய, அக்மீமன, பத்தேகம மற்றும் போபே, போத்தல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பிரதேசங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், களனி கங்கையின் மேல் பகுதிகளில் நேற்று இரவு முதல் கணிசமான மழை பெய்து வருவதால், தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்பே, ஹோமாகம, கடுவலை, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பிரதேச செயலக பிரிவுக்கும், களுத்துறை மாவட்டம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் 12 பிரதேச செயலக பிரிவுகளுக்கும் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கேகாலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள 41 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 04 மணி முதல் நாளை அதிகாலை 04 மணி வரை இந்த மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் கடும் மழையுடனான வானிலை இன்றும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
அதேநேரம் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் பரவலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.