சிறுபான்மையினரின் வாக்குகளுக்கு பெறுமதி வேண்டுமானால், தேசிய கட்சியொன்றின் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்

40 0

26 சதவீதமாக உள்ள சிறுபான்மையினரின் வாக்குகள் பெறுமதிமிக்க வாக்குகளாக மாற்றப்பட வேண்டுமானால், தேசிய ரீதியாக உள்ள தேசிய கட்சியொன்றின் வேட்பாளரை ஆதரிப்பதன் ஊடாக மாத்திரமே பயனடையலாம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்தார்.

மாளிகைக்காடு பாவா மண்டபத்தில் நடைபெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹும் மையோன் முஸ்தபாவின் மகனும் அவரது ஆதரவாளர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்த நிகழ்வில் கலந்துகொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுபான்மை சமூகம் இந்த நாட்டிலே தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழர் என்று 26 சதவீதம் வாழ்கின்றோம். இந்த 26 சதவீதமாகவுள்ள சிறுபான்மையினரின் வாக்குகள் பெறுமதிமிக்க வாக்குகளாக மாற்றப்பட வேண்டுமாக இருந்தால் தேசிய ரீதியாகவுள்ள தேசியக் கட்சி ஒன்றின் வேட்பாளரை ஆதரிப்பதன் ஊடாக மாத்திரம்தான் ஒரு பயனை அடையலாம். இல்லையென்றால், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்து சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் நான் ஜனாதிபதியாக வந்தேன் என்று மார்பு தட்டிப் பேசினாரோ, ஒரு இனவாதியாக செயற்பட்டாரோ அவ்வாறு இன்னுமொரு ஜனாதிபதி இந்த நாட்டில் உருவாகிவிடக் கூடாதென்றால் சிறுபான்மைச் சமூகம் எல்லோரும் ஒன்றுபட்டு தேசிய கட்சியில் போட்டியிடக்கூடிய பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதன் ஊடாக மாத்தரம்தான் நன்மைகளை அடைய முடியுமே ஒழியே, நாங்கள் பாராளுமன்றத் தேர்தலில் பிரிந்து நின்று செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாம் ஒன்றுபட்டு ஒரு பொது வேட்பாளரை ஆதரிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்றல்ல.

ஆதலால், எமது காலத்தை வீணடித்து சிறுபான்மை இனங்களின் பொது வேட்பாளர் என்று எமது மக்களின் வாக்குகளின் பெறுமதியை இல்லாமற்செய்கின்ற பிழையான முடிவாக போய்விடும்.

இவ்வாறு இருக்கின்ற நிலையில் சிறுபான்மை இனங்களின் பொது வேட்பாளர் வெற்றி பெற முடியாது என்பதற்கு காரணம் இருக்கின்ற நிலையில் அந்த வேட்பாளர் வடக்கா, கிழக்கா, தெற்கா என்று பேசிக்கொள்வதில் பயனடைய முடியாது என்றார்.